தமிழகம்

சாலையில் கிடந்த ரூ.1.80 லட்சம் போலீஸில் ஒப்படைப்பு: உர வியாபாரிக்கு பாராட்டு

செய்திப்பிரிவு

சாலையில் கிடந்த ரூ.1.80 லட்சம் பணத்தை நேர்மையாளர் ஒருவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

சென்னை தாம்பரம் அருகே முடிச்சூர் பகுதியில் வசிப்பவர் ராம்பாபு (66). படப்பையில் உரக்கடை நடத்தி வருகிறார். நேற்று காலையில் தனது பேரன்களை பள்ளிக்கு பஸ்ஸில் ஏற்றிவிடுவதற்காக முடிச்சூர் பிரதான சாலைக்கு வந்தார். அப்போது சாலையில் பேப்பர் பொட்டலம் ஒன்றை கண்டார். அதை எடுத்து பிரித்து பார்த்தபோது 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கத்தையாக இருந்தன.

அடுத்தவர் பணத்துக்கு சிறிதும் ஆசைப்படாத ராம்பாபு, அதை தாம்பரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

அதே நேரத்தில் பெரும் புதூரை சேர்ந்த சந்தானம் என்பவர் காவல் நிலையத்துக் குள் பதற்றத்துடன் வந்தார். அவர், முடிச்சூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது தான் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை தவறவிட்டு விட்டதாக கூறினார்.

உண்மையில் இது சந்தானத்தின் பணம்தானா என்பதை விசாரித்து உறுதி செய்துகொண்ட போலீஸார் பணத்தை அவரிடம் ஒப்படைத் தனர்.

பேத்தியின் நிச்சயதார்த்தம்

சந்தானத்தின் பேத்தி திருமண நிச்சயதார்த்தம் தாம்பரத்தில் நேற்று நடந்தது. திருமண செலவுகளுக்காக ரூ.1.80 லட்சம் பணத்தை எடுத்து வந்தபோது தவறவிட்டிருக்கிறார்.

ராம்பாபுவின் நேர்மையால் சந்தானம் பேத்தியின் திருமணம் நல்லபடியாக நடக்கவுள்ளது. ராம்பாபுவின் நேர்மையை சந்தானமும், போலீஸாரும் வெகுவாகப் பாராட்டினர்.

SCROLL FOR NEXT