முறைகேடான வகையில் தொலைபேசி இணைப்புகள் வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சன் டி.வி. ஊழியர்கள் உட்பட 3 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
தொலைதொடர்புத்துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்தபோது, சென்னை யில் உள்ள அவரது வீட்டில் முறைகேடான வகையில் சுமார் 300 பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை வைத்திருந்ததாக சிபிஐ அதிகாரிகள் வழக்கு தொடர்ந் தனர். இந்த வழக்கில் தயாநிதி மாறனின் கூடுதல் உதவியாளராக இருந்த கவுதமன், சன் டி.வி.-யின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், எலக்ட்ரீஷியன் ரவி ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கடந்த ஜனவரி 21-ம் தேதி கைது செய்தனர்.
இதையடுத்து மூவரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன. இந்நிலையில், 3 பேரும் மீண்டும் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீது நேற்று விசாரணை நடத்திய நீதிபதி பி.தேவதாஸ், மனுதாரர்கள் 3 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மனுதாரர்கள் 3 பேரும் சம்பந்தப்பட்ட புலன் விசாரணை அதிகாரிகள் முன்பு தினமும் காலையில் ஆஜராக வேண்டும். தங்கள் பாஸ்போர்ட்டையும் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் நிபந்தனைகள் விதித்துள்ளார்.