தேர்தலில் நடக்கும் ஊழலில் தமிழகம் முன்னணியான மாநிலம்; ஊழலை முறியடித்து வெற்றி பெற வேண்டுமானால் பாஜகவை பூத் வாரியாக வலிமைப்படுத்த வேண்டும் என அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்தார்.
கோவை அவிநாசி சாலையில், கோல்டுவின் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உறுப்பினர் சேர்க்கை தொடர்பான பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று தொடங்கியது. கூட்டத்தில் பங்கேற்க புதுடெல்லியில் இருந்து விமானம் மூலமாக அமித்ஷா நேற்று வந்தார். கட்சியின் மாவட்டத் தலைவர்களுடன் அவர் பேசியதாவது:
அகில இந்திய அளவில் உறுப்பினர் சேர்க்கை மூலமாக கட்சியைப் பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. ஒரு உறுப்பினர் நூறு உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட வேண்டும். இதற்காக 53 ஆயிரம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு புத்தகத்திலும் நூறு புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான விவரங்கள் இருக்கும். தற்போது, 12 ஆயிரம் புத்தகங்கள் நிரப்பப்பட்டுவிட்டன. மீதமுள்ள 41 ஆயிரம் புத்தகங்களில் புதிய உறுப்பினர்களை நிரப்பும் பணியை வரும் மார்ச் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும்.
தமிழகத்தில் 19 லட்சம் பேரை இணைத்துவிட்டோம். இன்னும், 26 லட்சம் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்த்துவிட்டால் தமிழகத்தில் வலிமையான கட்சியாக பாஜக உருவெடுக்கும். இந்த இலக்கை இம் மாத இறுதிக்குள் எட்டுவதற்கு ஒவ்வொருவரும் முயற்சி எடுக்க வேண்டும். இலக்கை எட்டாவிட்டால் உங்களை விட மாட்டேன். தேசியக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றி கூடுதல் அவகாசம் வாங்கிக் கொடுத்தாவது இலக்கை எட்ட வைப்பேன். இங்கு, பாஜகவை வலுவான கட்சியாக மாற்ற வேண்டியது அத்தியாவசியமானது.
நாடு முழுவதும் 10 கோடி உறுப்பினர்கள் சேர்க்கை சாத்தியமா என மூத்த அரசியல் அறிஞர்கள் கேட்டனர். தற்போது, 12 கோடியைத் தாண்டி உறுப்பினர் சேர்க்கை சென்று கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் 17 கோடி வாக்காளர்கள் பாஜகவுக்கு வாக்கு அளித்ததால் 252 தொகுதிகளைப் பிடிக்க முடிந்தது. இந்த 10 கோடி உறுப்பினர்களும், குறைந்தபட்சம் 3 புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறேன். இதன்மூலம் நாட்டில் 30 கோடி உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக பாஜக உருவெடுக்க முடியும். இவர்கள் நமக்கு வாக்கு அளித்தாலே அடுத்த தேர்தலில் 370 தொகுதிகளைப் பிடிக்க முடியும். இதன்மூலமாக நாம் அடிப்படைக் கொள்கைகளை எளிதாக நிறைவேற்ற முடியும் என்றார்.