சென்னை: தண்டையார்பேட்டை, அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மற்றும் பெருங்குடி மண்டலங்களில் சட்ட விரோதமாக பொருத்தப்பட்டிருந்த 34 குடிநீர் உறிஞ்சும் மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கை: குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் அழுத்தக் குறைபாடு தவிர்க்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள அனைத்து நுகர்வோருக்கும் சீரான மற்றும் சமமான குடிநீர் விநியோகம் உறுதி செய்யும் வகையில் மண்டலம் 1 முதல் 15 வரையிலான அனைத்து பகுதிகளிலும் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் ஆய்வு மேற்கொள்ளும்போது, குடிநீர் இணைப்புகள் மற்றும் பொது குழாய்களில் சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்சும் மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டால் மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு உரிய சட்டவிதிகளின் கீழ் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஏற்கெனவே பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் (செப்.7-ம் தேதி) சிறப்பு கண்காணிப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டபோது தண்டையார் பேட்டை மண்டலத்தில் எம்.கே.பி நகர், அம்பத்தூர் மண்டலத்தில் ஒ.டி பேருந்து நிலையம், முகப்பேர், அண்ணா நகர் மண்டலத்தில் சூளைமேடு, தேனாம்பேட்டை மண்டலத்தில் வள்ளுவர் கோட்டம், கிரீம்ஸ் ரோடு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம் மண்டலத்தில் எம்.ஜி.ஆர் நகர், அடையாறு மண்டலத்தில் தரமணி, பெருங்குடி மண்டலத்தில் கொட்டிவாக்கம், மற்றும் கந்தன்சாவடி ஆகிய இடங்களில் குடிநீர் குழாய்களில் சட்ட விரோதமாக குடிநீர் உறிஞ்சும் மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு 34 மின்மோட்டார்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கெனவே அடையாறு மண்டலத்தில் மட்டும் சட்ட விரோதமாக பொருத்தப்பட்டிருந்த 55 குடிநீர் உறிஞ்சும் மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், இதுவரை 89 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன, மேற்கூறிய இடங்களில் உள்ள குடியிருப்புகளின் உரிமையாளர்களுக்கு இனிவரும் காலங்களில் சட்ட விரோதமாக குடிநீர் உறிஞ்சும் மின்மோட்டார்களை பயன்படுத்தக் கூடாது.
மீறுவோரின் மீது உரிய சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.