டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் ‘மனிதநேயம்’ பயிற்சி நிலையத்தில் பயின்ற 5 மாணவிகள் முதல் 5 இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
பொருளாதார நிலையில் பின் தங்கியவர்களுக்கு உதவும் நோக்கில் ‘மனிதநேய அறக்கட் டளை’யை சைதை துரைசாமி 2005-ல் தொடங்கினார். ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான மத்திய சிவில் சர்வீஸ் தேர்வு மற்றும் தமிழகத்தின் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத விரும்புபவர் களுக்கு ‘மனிதநேயம்’ இலவசக் கல்வியகம் கடந்த 7 ஆண்டு களாக இலவசப் பயிற்சி அளித்து வருகிறது. இதில் பயின்று இது வரை 2169 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்று தேசிய, மாநில அளவில் பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர்.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான நேர்காணல் திங்கள்கிழமை நடந்தது. இதில், மொத்தம் உள்ள 25 காலிப் பணி யிடங்களில் ‘மனிதநேயம்’ மாணவிகள் நெய்வேலி டீனாகுமாரி, சென்னை அசோக் நகர் கீதாப் பிரியா, எர்ணாகுளம் ரேஷ்மி, கரூர் பூங்குழலி, நாமக்கல் மைதிலி ஆகியோர் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளனர்.
அவர்களுக்கு மனிதநேய அறக் கட்டளைத் தலைவரும் சென்னை மேயருமான சைதை துரைசாமி, நிர்வாகிகள் மல்லிகா துரைசாமி, வெற்றி துரைசாமி, வசுந்தரா வெற்றி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். இத்தகவலை இம்மையத்தின் மாநில போட்டித் தேர்வுகள் ஒருங்கிணைப்பாளர் சாம்ராஜேஸ்வரன் தெரிவித்தார்.