தமிழகம்

கடலூரில் முகத்துவாரத்தை ஆழப்படுத்த வலியுறுத்தி மீனவர்கள் 5-வது நாளாக வேலை நிறுத்தம்: படகுகளில் கருப்பு கொடிகள் ஏற்றி போராட்டம்

செய்திப்பிரிவு

கடலூரில் துறைமுக முகத்துவாரத்தை ஆழப்படுத்தக் கோரி மீனவர்கள் 5வது நாளாக கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தம் செய்தனர். படகுகளில் கருப்பு கொடிகளை கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் துறைமுகத்திலிருந்து முகத்துவாரம் வழியாக மீனவர்கள் படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர். இந்த முகத்துவாரம் ஆழமின்றி இருப்பதால் அடிக்கடி படகுகள் கவிழ்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதில் 10-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இறந்துள்ளனர்.

கடந்த 27-ம் தேதி அந்த பகுதியில் படகு கவிழ்ந்து ஆறுமுகம் என்ற மீனவர் பலியானார். இதையடுத்து முகத் துவாரத்தை ஆழப்படுத்தகோரி மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் விரைவில் முகத்துவாரத்தை ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்தனர்.

இதையடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். ஆனால் ஆழப்படுத்தும் பணி தொடங்கப்படவில்லை. முகத்துவாரத்தை ஆழப்படுத்தும் பணி தொடங்கும் வரை வேலை நிறுத்தம் செய்வது என்று மீனவர்கள் முடிவு செய்தனர். இதன்படி கடந்த 28-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தை தொடங்கினார்கள்.

நேற்று 5-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நீடித்தது. துறைமுகப்பகுதி, தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம், சிங்காரதோப்பு, பழங்கரை, தொத்திக்குப்பம், ராஜாபேட்டை, தாழங்குடா, நல்லவாடு உள்ளிட்ட மீனவ கிராம பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் கடற்கரையோரத்தில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

மேலும் படகுகளில் நேற்று கறுப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால் கடலூர் மீன் மார்க்கெட்டுக்கு மீன் வரத்து குறைந்துள்ளது. இதனால் மீன்களின் விலை ஏற்றமாக காணப்பட்டது.

          
SCROLL FOR NEXT