தமிழகம்

பாம்புகளை நேசித்த மாணவருக்கு பாசத்தால் நேர்ந்த விபரீதம்

செய்திப்பிரிவு

திண்டுக்கல்லில் பாம்புகளை பிடித்து காட்டில் கொண்டுபோய் விட்டு வந்த கல்லூரி மாணவர் பாம்பு கடித்து பலியாகி உள்ளார்.

திண்டுக்கல் கிழக்கு கோவிந்தா புரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி கார்த்திகாயினி. மூத்த மகள் மோகனா ராகவி, பல் மருத்துவர். இளைய மகன் நவீன்குமார் (18), திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்தார்.

நவீன்குமாருக்கு பாம்புகள் மீது அலாதி பிரியம். யாராவது வீட்டுக்குள் பாம்பு வந்து விட்டது எனக் கூப்பிட்டால், அடுத்த நிமிடமே அங்கு போய் பாம்பை பிடித்து வந்து உணவூட்டி டப்பாவில் அடைத்து மறுநாள் பாதுகாப்பாக சிறுமலைக் காட்டில் கொண்டு போய் விடுவார்.

ஹீரோ போல காட்டிக் கொள்வதில் ஆர்வம்

விடுமுறை நாட்களில், பாம்பு களை தேடிப்போய் பிடித்து வந்து அவற்றை கழுத்தில் போட்டு சக மாணவர்களிடம் ஹீரோ போல காட்டிக் கொள்வாராம்.

10 வயதில் குளத்தில் குளிக்கச் சென்ற இடத்தில் தண்ணீர் பாம்புகளை பிடித்தவர், தொடர்ந்து மற்ற பாம்புகளையும் பிடிக்க பழகினார். இதற்காக எந்தப் பயிற்சியும் எடுக்கவில்லை.

உயிரை பறித்த ராஜநாகம்

எல்லா பாம்புகளையும் பிடித்து விட்டேன். ராஜநாகத்தை மட்டும் பிடிக்கவில்லை என அடிக்கடி நண்பர் களிடம் கூறியுள்ளார். அதேபோல, சில நாள்களுக்கு முன், இவரது வீட்டுக்கு அருகே காமாட்சிபுரத்தில் ராஜநாகத்தை பிடித்துள்ளார். அதன் வாயில் முத்தம் கொடுத்தபோது பாம்பு உதட்டில் கொத்தியது. இதில் சிகிச்சை பலனின்றி நவீன்குமார் இறந்தார். அவரது தாய் கார்த்திகாயினி கூறும்போது, பாம்பை அடிச்சா அவனுக்கு பிடிக்காது. பாம்புக மேல உயிரா இருந்தான். கடைசில, அவன் உயிரை பாம்பே பறித்துவிட்டது. அவன் காப்பாற்றிய உயிர்களுக்கும், பாம்புகளுக்கும் கணக்கே கிடையாது.

ஒருமுறை பக்கத்து வீட்டில் தூங்கிய குழந்தை பக்கத்துல ஆறரை அடி நீள கருநாகம் கிடந் தது. எல்லாருக்கும் பக்கத்துல போக பயம். இவன் பயப்படாம, பாம்பை பிடித்து குழந்தையைக் காப்பாற்றி னான். ஊரே அவனைப் பாராட்டியது. அதுமுதல் பாம்பு பிடிக்க போனா, சத்தம் போடமாட்டோம். பாம்பு பிடிக்க யாராவது காசு கொடுத்தால் அவ னுக்கு பிடிக்காது. அவன் வீரமா செத்துட்டு எங்களை கோழையாக் கிட்டான் என கண் கலங்கினார்.

ஆபத்தில் முடிந்த அதீத ஆர்வம்

மாவட்ட வன அலுவலர் வெங்க டேஷ் கூறும்போது, பாம்புகளில் அதிக விஷம் கொண்டது ராஜநாகம்தான். இந்த பாம்பு வனப்பகுதியில் மட்டுமே வசிக்கும். வெளியே வருவதே அபூர்வம். பாம்பை பிடிக்க அச்சம் கூடாது. கவட்டை கம்பு இருந்தால் போதும். கழுத்தைப் பிடித்தால் எந்தப் பாம்பும் கடிக்காது.

எல்லா பாம்புகளும் வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பாது காக்கப்பட வேண்டிய உயிரினம்தான். அவற்றை வீட்டில் வைத்திருக்கக் கூடாது என்றார்.

SCROLL FOR NEXT