கிணற்றில் நீச்சல் கற்ற கூலித் தொழிலாளியின் மகள், மாநில அளவிலான நீச்சல் போட்டியில் 3-ம் இடத்தை பிடித்து சாதித்துள்ளார்.
சர்வதேச அளவில் விளையாட்டு துறையில், இந்தியா வெற்றி காண வேண்டும் என்றால், கிராமப்புற இளைஞர்களின் மீது அரசாங்கம் தனது பார்வையை பதிக்க வேண்டும் என்ற சொல்லுக்கு வலு சேர்க்கும் வகையில், மாநில அளவிலான நீச்சல் போட்டியில் சாதித்துள்ளார் திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவி ஏ.வெண்ணிலா.
அவர் கூறும்போது, “திருவண்ணாமலை அருகே உள்ள ஆடையூர் கிராமத்தில் வசிக்கிறேன். எனது தந்தை ஏழுமலை, கூலித் தொழிலாளி. எங்கள் வீட்டில் உள்ள கிணற்றில், 3-ம் வகுப்பு படிக்கும்போதே நீச்சல் பழக தொடங்கினேன். என் அண்ணன்கள் அருள்குமார், ரவிகுமார் ஆகியோர், எனக்கு நீச்சல் கற்றுக் கொடுத்தனர். போட்டிகளில் கலந்துகொள்ள தந்தை ஏழுமலை, தாய் மகேஸ்வரி ஆகியோர் தொடர்ந்து ஊக்கம் அளித்தனர். அதன்பேரில் மாவட்ட, மண்டல அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று 15-க்கும் மேற்பட்ட பதக்கங்களைப் பெற்றுள்ளேன்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஜனவரி 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெற்ற பாரதியார் தின மற்றும் குடியரசு தின விழா மாநில நீச்சல் போட்டியில் முதல் முறையாக பங்கேற்றேன். வேலூர் மண்டலம் சார்பில் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 100 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் போட்டியிட்டேன். அதில், 2.47.17 நிமிடங்களில் இலக்கை அடைந்து, 3-வது இடத்தைப் பிடித்துள்ளேன்.
நீச்சல் பயிற்சி பெறுவதற்கு போதிய வசதிகள் கிடையாது. பயிற்சியாளரும் இல்லை. கிணற்றில்தான் தொடர்ந்து நீச்சல் கற்று வருகிறேன். நான் நீச்சல் பயிற்சி பெறவும், படிக்கவும் தமிழக அரசு உதவி செய்தால் தேசிய மற்றும் சர்வதேச அளவில் சாதிப்பேன். அதற்கு அரசாங்கம் உதவ வேண்டும்” என்றார்.