ராணிப்பேட்டை சிப்காட்டில் பரிதாபமாக 10 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த தோல் கழிவுகளை அகற்று வதில் தாமதமும் அலட்சிய மும் காட்டப்படுவதாக தெரிய வந்துள்ளது.
ராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் பரவியுள்ள அபாயகரமான தோல் கழிவுகளை அகற்றும்போது நச்சு வாயு வெளியேறாமல் இருக்க மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கழிவுகளை 2 நாளில் அகற்றி முடிக்க திட்டமிடப்பட்டது.
இதற்கிடையே, பொக்லைன் இயந்திரங்கள் மூலம் கழிவுகளை அகற்றும் பணி நேற்று முன்தினம் இரவு நடந்தது. அப்போது, பொது சுத்திகரிப்பு நிலையத்துக்கு கழிவுகள் கொண்டு செல்லும் குழாய் உடைந்ததால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. நேற்று காலை உடைப்பு ஏற்பட்ட பகுதி சரி செய்யப்பட்டு, மீண்டும் பணிகள் தொடங்கியது. தோல் கழிவுகளை முழுமையாக அகற்றுவதில் கால தாமதம் ஏற்படும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து, வேலூர் மாவட்ட சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்பின் நிர்வாக உறுப்பினர் கஜபதி கூறியதாவது:
சிப்காட்டில் வெளியேறிய தோல் கழிவில் அதிகபட்சமாக 2 லட்சம் அளவில் டிடிஎஸ் இருக்கும். அபாயகரமான இந்தக் கழிவை உடனடியாக அகற்ற வேண்டும். காலதாமதம் ஏற்பட்டால் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கும். தேங்கிய கழிவை சுத்தப்படுத்தினாலும் நிலத்தில் ஊறிய கழிவுகள் மழைக் காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.