கர்நாடகாவின் பணக்கார வேட்பாளரான நந்தன் நிலகேனி பெங்களூரில் வெள்ளிக்கிழமை அரசு பேருந்தில் தொகுதிக்கு சென்று வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரத்தின்போது சாலையோர டீக்கடைகளில் டீ குடித்தும் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடியும் நந்தன் நிலகேனி வாக்கு சேகரித்தது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும் ஆதார் அட்டை திட்ட முன்னாள் இயக்குநருமான நந்தன் நிலகேனி காங்கிரஸின் சார்பாக பெங்களூர் தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் தொடர்ந்து 5 முறை வென்றவரும் பா.ஜ.கவின் தேசியச் செயலாளருமான அனந்த்குமார் போட்டியிடுகிறார்.
பிரச்சார ஸ்டைல்
சாலையோர டீக்கடைக்கு சென்று பொதுமக்களுடன் டீ குடிப்பது மாலைநேரத்தில் திடீரென மைதானத்திற்கு சென்று இளைஞர்களோடு கிரிக்கெட் விளையாடி வாக்கு சேகரிப்பது என தினந்தினம் புதுப்புது தேர்தல் பிரச்சாரத்தில் நந்தன் நிலகேனி ஈடுபட்டு வருகிறார். பெங்களூரில் வெள்ளிக்கிழமை காலை ஜெயநகர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த நந்தன் நிலகேனி திடீரென இந்திரா நகர் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறினார். 12 ரூபாய் கொடுத்து பயணச்சீட்டு பெற்ற அவர், இந்திரா நகர் வரை சக பயணிகளிடம் வாக்கு சேகரித்தார்.
இந்திரா நகரில் இறங்கி, வீதி வீதியாக நடந்து சென்று எளிமையான முறையில் வாக்காளர்களின் வீடு தேடி சென்று வாக்கு சேகரித்தார். அதனைத் தொடர்ந்து மாலையில் இந்திரா நகர் பூங்காவில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்களை சந்தித்து தனக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார். நந்தன் நிலகேனியின் எளிமையான பிரச்சார முறை பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
ரூ.7,700 கோடி சொத்து
நந்தன் நிலகேனி தான் இந்தியாவின் கோடீஸ்வர வேட்பாளர்களில் முன்னணி யில் இருப்பவர். அவருக்கும்,அவரது மனைவி ரோஹினிக்கும் சேர்த்து ரூ. 7700 கோடி சொத்து இருப்பதாக வேட்பாளர் மனுவில் தெரிவித்துள்ளனர்.