கல்லூரிகளில் தற்போது உள்ள பாடத்திட்டத்தில் 25 சதவிகிதத்தைக் குறைத்து மாணவர்களுக்கு தொழில் சார்ந்த பயிற்சி அளிக்க வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கேட்டுக்கொண்டார்.
விருதுநகர் வே.வ.வன்னியப் பெருமாள் மகளிர் கல்லூரி நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்ற அவர் மேலும் கூறும்போது, ‘இப்போது இருக்கும் பாடத்தை 25 சதவிகிதம் குறைத்து, அதில் தொழில்திறன் மேம்பாடு, தொடர்பு திறன் மேம்பாடு, பண்பாட்டுத் திறன் மேம்பாடு, அறிவுத்திறன் மேம்பாடு, உலக வாழ்க்கை அனுபவ திறன் மேம்பாடு, உடல் நலம் மற்றும் மனநலன் மேம்பாடு போன்ற பாடத்திட்டங்களை அனைவருக்கும் கற்பிக்க வேண்டும். உலகத்தரம் வாய்ந்த திறன் மேம்பாட்டு சான்றிதழுடன் மாணவர்கள் வெளியே வரும்போது உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களில் வேலைக்குச் செல்லும் வகையிலும், தொழில் முனைவோராகவும் தகுதிப்படுத்தி அனுப்ப முடியும்.
மேல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஒரு நல்ல அனுபவமிக்க கல்வியாக மாறினால் மட்டுமே தகுதிவாய்ந்த, தரம் நிறைந்த ஒரு அறிவார்ந்த சமுதாயத்தைப் படைக்க முடியும். அதன் மூலம் படிப்பவர்கள் எண்ணிக்கை மட்டுமல்ல, தரம் வாய்ந்த கல்வியைப் பெற்று நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் ஆதார விதைகளான தன்னம்பிக்கை கொண்ட இளைஞர்களை உருவாக்க முடியும். இப்படிப்பட்ட கல்வி சீர்திருத்தம் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் விரைவில் வர வேண்டும் என்பது எனது கனவு’ என்றார். பின்னர் மாணவிகளின் கேள்விக்குப் பதில் அளிக்கும்போது, அனைத்து ஆறுகளையும் இணைக்க வேண்டும் என பதிலளித்தார்.
முன்னதாக கல்லூரி முதல்வர் செல்வ மீனாட்சி வரவேற்றார். நிர்வாகத் தலைவர் வன்னி ஆனந்தம், செயலர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பேசினர்.
அதைத் தொடர்ந்து, கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 125-வது ஆண்டு விழாவிலும் பங்கேற்றுப் பேசினார்.