தமிழகம்

அரசு அதிகாரிகள் அரசியலுக்கு வருவது ஏற்புடையதே: அதிமுகவில் இணைந்த ஆர்.நட்ராஜ் பேட்டி

எஸ்.சசிதரன்

முதல்வர் ஜெயலலிதாவை செவ்வாய்க்கிழமை சந்தித்து அதிமுக-வில் திடீரென தன்னை இணைத்துக் கொண்ட முன்னாள் போலீஸ் அதிகாரியும், டிஎன்பிஎஸ்சி முன்னாள் தலைவருமான ஆர். நட்ராஜ், “தி இந்து”-வுக்கு அளித்த பிரத்தியேக பேட்டி:

திடீரென கட்சிப் பிரவேசம் ஏன்? எதிர்பார்ப்பு ஏதேனும் உள்ளதா?

அரசுப் பணியில் இருந்து, அரசியல் பணிக்கு வந்திருக்கிறேன். சிறிய வட்டத்தில் இருந்து பெரிய வட்டத்துக்கு வந்திருக்கிறேன். எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அரசுப் பணியில் மக்களுக்கு சிறிய அளவில் பணி செய்து வந்தேன். அதனை நேர்மையாகவும், கடமை யுணர்வோடும் செய்தேன். அதை அரசியலிலும் கடைபிடிப்பேன். நான் ஆற்றிய மக்கள் (அரசு) பணியின் நீட்சியாகவே இந்த அரசியல் பணியை கருதுகிறேன். அரசியலில் நன்றாக யோசித்து, திட்டங்களைத் தீட்டி அவற்றை மக்கள் நலனுக்காக பெரிய அளவில் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்பதே எனது அரசியல் பிரவேசத்துக்கு முக்கிய காரணம்.

பிரச்சாரத்துக்குச் செல்வீர்களா?

கட்சியில் சேர்ந்ததற்காக முதல்வரை நேரில் பார்த்து ஆசி பெற்றேன். கட்சிக்காக பிரச்சாரத் துக்கு செல்வேனா? இல்லையா? என்பது கட்சித் தலைமைதான் முடிவு செய்யும். கட்சி என்ன சொல்கிறதோ அதன்படி நடப்பேன்.

அரசியலுக்கு அரசு அதிகாரிகள் வருவது நல்லதா?

அரசு அதிகாரிகள் அரசியலுக்கு வருவது நன்மைக்கே. அவர்கள் அரசுத் துறையைப் பற்றியும், அரசு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்தும் நன்கு அறிந்திருப்பார்கள். அவர்கள் பொது அறிவு உள்ளவர்களாகவும், மக்களின் பிரச்சினைகளை விரல்நுனியில் வைத்திருப்பவர்களாகவும் இருப்பார்கள். எனவே அரசு அதிகாரிகள் அரசியலுக்கு வருவது ஏற்புடையதே.

அரசியல் பிரவேசத்துக்கு எதிர்ப்பு இருந்ததா?

எல்லா குடும்பங்களிலும் இருப்பதுபோல் எங்களது வீட்டிலும் சற்று தயக்கம் இருக்கத்தான் செய்தது. அதையெல்லாம் மீறித்தான் தற்போது அரசியலில் குதித்துள்ளேன்.

அதிமுக-வின் சாதனைகளைப் பற்றி பேசுவீர்களா?

பொதுவாகவே நான் பங்கேற்கும் கூட்டங்களில் மக்கள் நலனைப் பற்றி தொடர்ந்து பேசி வந்திருக்கிறேன். தற்போது, அதிமுக-வில் சேர்ந் திருப்பதன் மூலம் முதல்வரின் தொலைநோக்குத் திட்டம் 2023-ல் உள்ள சிறப்பு அம்சங்களை, குறிப்பாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். தமிழகத்தில் 1.5 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவது போன்ற அம்சங்களை மக்களிடம் கொண்டு செல்வேன். இவ்வாறு நட்ராஜ் கூறினார்.

வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் அமைப்பு என்ற முறையில் பல லட்சம் இளைஞர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் டிஎன்பிஎஸ்சி -யின் தலைவராக ஆர்.நட்ராஜ் இருந்த காலத்தில்தான், ஆன்லைன் மூலம் மனு செய்யும் புதிய முறையும், ஆன்லைனில் ஹால்டிக்கெட் வழங்கும் திட்டமும், வருடாந்திர தேர்வு அட்டவணையை முன்கூட்டியே அறிவிக்கும் முறையும் அறிமுகப் படுத்தப்பட்டது.

குறித்த காலத்தில் தேர்வு முடிவுகளை அறிவிக்கும் திட்டம் உள்பட பல்வேறு புதிய நடைமுறைகளை அறிமுகம் செய்த அவர், பல லட்சம் இளைஞர்களைப் பற்றிய தகவல்களையும், அவர்களின் எண்ணங்களையும் நன்கு அறிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT