அரக்கோணம் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகரை கத்தியால் வெட்டிய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம் விண்டர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நிவேத் (23). ரயில்வேயில் டிக்கெட் பரிசோ தகராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு அரக்கோணம் ரயில் நிலையத்தில் பணியில் இருந்தார். இரவு 11 மணியளவில் சென்னையில் இருந்து பழநி நோக்கிச் சென்ற ரயில் அரக்கோணம் வந்தது.
அப்போது, பிளாட்பாரத்தில் நின்றுகொண்டு பயணிகளிடம் நிவேத், டிக்கெட் பரிசோதனை செய்துகொண்டிருந்தார். அதே நேரம், பெண்கள் பெட்டியில் இருந்து கூச்சல் கேட்டது. அந்த பகுதிக்கு நிவேத் சென்றார்.
பெட்டியில் இருந்து வேகமாக இறங்கிச் சென்ற இரண்டு இளைஞர்களிடம் டிக்கெட் கேட்டுள்ளார். இதனால் டிக்கெட் பரிசோதகரிடம் தகராறு செய்த இளைஞர்கள் இருவரும், திடீ ரென மறைத்து வைத்திருந்த கத்தியால் நிவேத்தின் தலை மற்றும் கையில் குத்தி, சரமாரியாகத் தாக்கினர்.
இதில், படுகாயம் அடைந்த நிவேத் கூச்சலிட்டுள்ளார். ரயில்வே போலீஸார் விரைந்து வருவதற்குள் அந்த இளைஞர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிவேத், அரக்கோணம் ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
நிவேத் அளித்த புகாரின்பேரில் ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.