தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஜெயலலிதா பதவியிழந்த பிறகு பன்னீர்செல்வம் முதல் வராகி 125 நாட்கள் கடந்து விட்டன. பன்னீர்செல்வத்தின் ஆட்சிக் காலத்தில் தமிழக நிதி நிலைமை அதலபாதாளத்தில் விழுந்து கிடக்கிறது. தமிழக அரசின் கடன் தொகை ரூ. 1,80,000 கோடியாக உள்ளது. மின்சார வாரியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கியுள்ள கடனையும் சேர்ந்தால், தமிழகத்தின் கடன் ரூ. 4,00,000 கோடியை தாண்டுகிறது. ஒரு மாநில அரசு மொத்த மதிப்பில் 3 சதவீதம் தான் கடன் வாங்க வேண்டும் என்ற நிலையில் தமிழக அரசு அதைவிட அதிகமாக கடன் வாங்குகிறது.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, வரலாறு காணாத அளவுக்கு பின் தங்கியுள்ளது என்பதற்கு நிறைய புள்ளி விவரங்கள் உள்ளன. கடந்த 2012-13-ம் ஆண்டில், வளர்ச்சியில் 5-வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 18-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மின்வெட்டு, சாலைக்கட்டமைப்பில் அலட்சியம், ஊழல் நோக்கம் போன்றவற்றால் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு யாரும் முன் வருவதில்லை.
இந்தியாவிலேயே அதிக பொறியாளர்களை உற்பத்தி செய்யும் மாநிலமாக தமிழகம் உள்ளது. சென்னை மதுரவாயல் மேம்பாலத்திட்டம் முடக்கம், சென்னை – பெங்களூரு எக்ஸ் பிரஸ் காரிடர் திட்டம் முடக்கம், சென்னை – பெங்களூரு ஆறு வழிச்சாலை திட்டம் முடக்கம், போன்றவற்றால் தமிழகம் இப்படி தாழ்ந்து போயுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.