சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் புதிய தொழில் தொடங் கும் முறைகள் மற்றும் அதற்கான வாய்ப்புகள் குறித்த 5 நாள் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.
மத்திய அரசின் கீழ் இயங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிறுவனம் சார்பில் பல்வேறு தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் 45-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வமாக கலந்துகொண்டனர்.
இது குறித்து பயிற்சி மைய உதவி இயக்குநர் என்.சிவலிங்கம் கூறியதாவது: படிக்காத மாணவர்களும், படித்த இளை ஞர்களும் புதியதாக தொழில் தொடங்கும் வகையில் தொழில் பயிற்சியை அளித்து வருகிறோம். அந்த வகையில் தற்போது சுற்றுச் சூழலை பாதிக்காத பொருட்களை தயார் செய்வது தொடர்பான 5 நாட்கள் பயிற்சி தொடங்கியுள்ளது.
காகித பைகள், தட்டுகள், பாக்குமட்டை தட்டுகள் போன்ற 10 வகையான பொருட்களை தயாரிக்க பயிற்சிகள் அளிக்கவுள்ளோம். பயிற்சி முடிந்தவுடன் சான்றிதழ்கள் அளிக்கப்படும். பின்னர், அவர்கள் தொழில் தொடங்க விரும்பினால் வங்கிகள் மூலம் ரூ.5 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை கடன் வழங்க வழிவகை செய்யப்படும். மொத்த கடன் தொகையில் 35 சதவீதம் வரையில் மானியம் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.