தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் நாளை தொடங்குகிறது. காலை 10.45 மணிக்கு தொடங்குவதற்கு பதிலாக காலை 11.15 மணிக்கு தொடங்கும் என சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டிற்கான முதல் கூட்டத்தொடர் பிப்ரவரி 17-ம் தேதி காலை 10.45 மணிக்கு ஆளுநர் ரோசய்யா உரையுடன், தொடங்கும் என கடந்த 7-ம் தேதி சட்டப் பேரவை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்திருந்தார். வரும் நிதியாண்டில் அரசின் முக்கிய திட்டங்கள் ஆளுநர் உரையில் இடம்பெறக் கூடும் என கூறப்படுகிறது. இந்நிலையில், சட்டப் பேரவை தொடங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு ஆளுநர் இந்திய அரசமைப்பு, பிரிவு 174 (1)-ன் கீழ், தமிழ்நாடு சட்டப் பேரவையின் கூட்டத்தை, 2015-ம் ஆண்டு பிப்.17ம் தேதி (நாளை) காலை 10.45 மணிக்கு பதிலாக, அன்றைய தினம் காலை 11.15 மணிக்கு தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூட்டியிருக்கிறார். இதில், தமிழக ஆளுநர் காலை 11.15 மணிக்கு உரை நிகழ்த்தவுள்ளார்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.