தமிழகம்

ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில் விழுப்புரம் இளைஞர் தமிழில் முதலிடம்

செய்திப்பிரிவு

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த மாதம் நடைபெற்ற தேர்வில் விழுப்புரம் இளைஞர் தமிழில் முதலிடம் பிடித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1,868 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மாதம் 10-ம் தேதி தேர்வு நடத்தியது. தமிழ்நாடு முழுவதும் 499 மையங்களில் சுமார் 2 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இறுதிகட்ட தேர்வு முடிவுகளை இணையதளத்தில் நேற்று முன்தினம் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. மேலும், சான்றிதழ் சரிபார்ப்புக்கு 1:1 என்ற விகிதத்தில் தேர்வானவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அதற்கான பட்டியலும் வெளி யிடப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வில் விழுப்புரம் அருகே உள்ள அன்னியூர் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் விடுதி காப்பாளராக பணியாற்றும் ந. பாலு என்பவர் தமிழ் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். அவர், இந்த தேர்வில் 150-க்கு 112 மதிப்பெண் பெற்றிருக்கிறார்.

இவரது சொந்த ஊர், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியத்தில் உள்ள ஆவுடையார் குப்பம் கிராமம். மயிலம் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்துள்ளார். படிக்கும்போது திண்டிவனத்தைச் சேர்ந்த சங்கீதா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். கலப்பு திருமணப் பிரிவின் கீழ் அரசுப் பணி கிடைத்து விடுதி காப்பாளராக பணியாற்றுகிறார்.

தற்போது, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றதன் மூலம் தனது லட்சியம் நிறைவேறியதாக தெரிவித்தார்.

SCROLL FOR NEXT