தமிழகம்

கவரப்பேட்டை ஏ.என்.குப்பம் சாலையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு சீரமைப்புப் பணி: ‘தி இந்து’ செய்தி எதிரொலி

செய்திப்பிரிவு

5 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ள ஏ.என். குப்பம் சாலையை, தற்காலிகமாக சீரமைக்கும் பணியை கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் தொடங்கியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை அருகே, ஜி.என்.டி. சாலையை ஒட்டி அமைந்துள்ள, 6 கி.மீ. தூரம் கொண்ட ஏ.என் குப்பம் சாலையின் பெரும்பகுதி கடந்த 5 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக இருந்தது.

இதனால், 16-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நாள்தோறும் அவதியடைந்து வந்தனர்.

இதுகுறித்து, கடந்த 3-ம் தேதி ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் விரிவாக செய்தி வெளியானது. அந்த செய்தியின் எதிரொலியாக, கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில், ஏ.என்.குப்பம் சாலையை தற்காலிகமாக சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக நடந்துவரும் இந்தப் பணியில், சாலையில் உள்ள குழிகள், கிராவல் மண்ணால் நிரப்பப்படுகின்றன. இப்பணி ஓரிரு நாளில் முடிவுக்கு வரும் எனவும், விரைவில் நீண்ட நாட்களுக்கு நீடிக்கும் வகையில், தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT