நெசவாளர்கள் தங்களது தயாரிப்புகளை வாங்கும் வாடிக்கையாளருக்கு நன்றி தெரிவிக்கும் விதமான வாசகங்கள் அடங்கிய அட்டைகளை, தனது புதிய ரக சேலைகளில் இடம்பெறச் செய்யும் உத்தியை கோ-ஆப் டெக்ஸ் தொடங்கியுள்ளது.
தமிழக அரசு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை இணைத்து, அவற்றைச் சேர்ந்த நெசவாளர்கள் தயாரிக்கும் ஆடைகளை விற்பனை செய்துவருகிறது. ஆடைகளை நெய்யும் நெசவாளர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அந்த ஆடைகளில் நெசவாளர்களின் உருவப்படம் மற்றும் விவரங்கள் பொறித்த செவ்வக வடிவிலான சிறிய அட்டைகளை இணைத்து விற்பனை செய்யும் திட்டத்தினை அமல்படுத்தியுள்ளது.
கோ-ஆப் டெக்ஸில் ஆடைகளை வாங்கினால், எங்கோ ஒரு நெசவாளி பயனடைகிறார் என்ற எண்ணத்தை வாடிக்கையாளரின் மனதில் ஏற்படுத்தவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து, தற்போது மேலே ஒருபடி போய், சேலைகளை வாங்கும் வாடிக்கையாளருக்கு நெசவாளர்கள் நன்றி சொல்வதற் கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தியை, புதிதாக அறிமுகப்படுத்தும் ஆர்கானிக் புடவைகளில் அந்நிறுவனம் புகுத்தியுள்ளது.
இது குறித்து கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநர் டி.என்.வெங்கடேஷ் கூறியதாவது:
இப்போதெல்லாம் விவசாய நிலங்கள், பூச்சிக்கொல்லி மருந்து போன்றவற்றால் மாசடைந்து காணப்படுகின்றன. அதுபோன்ற நிலங்களை மூன்றாண்டுகள் தரிசாக வைத்து, அதன் நச்சுத்தன்மை முழுவதுமாக நீங்கிய பிறகு, அதில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பருத்தி மூலம் தயாரிக்கப்படும் பஞ்சினைக் கொண்டு இந்த ‘ஆர்கானிக்’ ரக சேலைகளை கோவை மாவட்டம் பல்லடத்திலுள்ள வதம்பச்சேரியைச் சேர்ந்த இரு கூட்டுறவு நெசவாளர் சங்கத்தினர் நெய்து தயாரிக்கின்றனர். அவற்றில், வேதிப் பொருட்களடங்கிய சாயங்
களை கலக்காமல் சங்குப்பூ, கரிசலாங்கண்ணி கீரை, கருங்காலி மரப்பட்டை, செவ்வாழைப் பூ தோல் போன்ற இயற்கை தாவரங்களில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களை வைத்து சேலைகளுக்கு சாயம் போடுகின்றனர். இது கோடை காலத்தில், வழக்கமான பருத்திச் சேலைகளைக் காட்டிலும் வசதியாக இருக்கும். இவ்வகைச் சேலைகளை கோ-ஆப்டெக்ஸ் தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவிலுள்ள அரசு கூட்டுறவு நிறுவனங்களில் கோ-ஆப்டெக்ஸே முதல்முறையாக இதனை அறிமுகப்படுத்துகிறது.
நன்றி அட்டைகள்
அவற்றில், அதை நெய்த நெசவாளரின் பெயருடன், புகைப்படமும் எழுதிய அட்டை இணைக்கப்பட்டிருக்கும். அதில் அவர், “இந்த சேலையை வாங்கியதற்கு மிகவும் நன்றி,” என்று கூறுவதுபோன்ற ஆங்கில வாசகமும் இடம்பெறும். இந்த ‘இயற்கை சேலையின்’ விலை ரூ.4000 முதல் ரூ.4500 வரை ஆகும். சென்னையில் மட்டும் இதனை முதலில் அறிமுகப்படுத்துகிறோம்.
இந்த ‘நன்றி’ அட்டை உத்தி, வாடிக்கையாளர் மற்றும் நெசவாளர்களுக்கிடையே ஒருவித பிணைப்பினை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம். இதனால், விற்பனையும் அதிகரிக்கும். இதற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து மற்ற ரகங்களிலும் இந்த ‘நன்றி’ தெரிவிக்கும் அட்டையை வைப்பது பற்றி முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.