டெங்கு காய்ச்சல் பாதிப்பால் ராஜபாளையத்தில் 18 பேர் உயிரிழந்ததற்கு, முறையற்ற குடிநீர் விநியோகமே காரணம் என்று சுகாதாரத் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜ பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த மாதம் டெங்கு காய்ச்சலால் சுமார் 50 பேர் பாதிக்கப்பட்டனர். காய்ச்சலின் தீவிரத்தால் சிறுவர்கள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குநர் (டிபிஎச்) கே.குழந்தைசாமி, மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) கீதாலட்சுமி தலைமையி லான குழுவினர் ராஜபாளையத்தில் முகாமிட்டு டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இதற்கிடையே, ராஜபாளையத் தில் டெங்கு பாதிப்பு தீவிரம் ஆனதற்கான காரணத்தை அறிய ஓய்வுபெற்ற சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதியில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் 20 நாட்களுக்கு மேல் குடிநீரை சேமித்து வைத்ததே டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கான முக்கிய காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆய்வு குறித்து ஓய்வுபெற்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் இருந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீரை வீணாக்காமல் வீட்டின் மேல் உள்ள தொட்டிகள் மற்றும் பாத்திரங்களில் சேமித்து வைத்து பயன்படுத்தியுள்ளனர்.
டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் எஜிப்டி என்ற வகை கொசு சுத்தமான தண்ணீரில்தான் உற்பத்தியாகிறது. அதுவும் 10 நாட்கள் தொடர்ந்து தேக்கி வைக்கப்படும் தண்ணீரில் ஏடிஸ் எஜிப்டி கொசு முழு வளர்ச்சி பெற்றுவிடும். இதுதான் ராஜபாளையம் பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணமாக இருந்துள்ளது.
தற்போது ராஜபாளையம் நகராட்சி பகுதியில் 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதுவே ஆபத்தான ஒன்றுதான். 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகித்தால், மக்களும் நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்க மாட்டார்கள். இதனால் டெங்கு காய்ச்சல் பரவுவதை முழுவதுமாக தடுத்துவிடலாம். இதுபற்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம். வீடுகளில் 10 நாட்களுக்கு குடிநீர் சேமித்து வைப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.
பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம்
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘தமிழகத்தில் டெங்கு காய்ச்சலைத் தடுக்க, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம். வீடுகளில் தண்ணீர் வைத்துள்ள குடங்கள் மற்றும் பாத்திரங்களை பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும். தேவையில்லாமல் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற வேண்டும். அரசுடன் இணைந்து பொதுமக்களும் ஒத்துழைப்பு அளித்தால் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுத்துவிடலாம்’’ என்றனர்.