பாளையங்கோட்டை தூய இஞ்ஞாசியார் கல்வியியல் கல்லூரியில் சமூக அவலங்களை கண்முன் நிலைக்காட்சிகளாக மாணவியர் அரங்கேற்றினர்.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிலைக்காட்சி நிகழ்ச்சியை மேயர் இ. புவனேஸ்வரி தொடங்கி வைத்தார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் எம். அசோக் பத்மராஜ், செஞ்சிலுவை சங்கத் தலைவர் டி.ஏ. பிரபாகர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி மாணவியர் தாமரை, டேபோடில்ஸ், டூலிப், ரோஜா, மல்லிகை என்று 5 குழுக்களாக பிரிந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகள், ஏழை பணக்கார ஏற்றத்தாழ்வு, கூட்டுக்குடும்ப சூழல் சிதைவு, சாலை விதிகளை கடைபிடிக்காமை, குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் போன்றவற்றை நிலைத்த காட்சிகளாக நடத்தினர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற நிலைக்காட்சியை பல்வேறு பள்ளி மாணவ, மாணவியர் பார்வையிட்டனர்.
நிலைக்காட்சிக்கான ஒருங்கிணைப்பாளர் முனைவர் சி.ஆர். கிளாடிஸ் ஸ்டெல்லாபாய் கூறும்போது, ‘கடந்த 25 ஆண்டுகளாக இக் கல்லூரியில் நிலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். பல்வேறு கல்வி நிலையங்களை சேர்ந்த மாணவ, மாணவியர், பொதுமக்கள் பார்க்கும் வகையில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் இதுபோன்ற நிலைக்காட்சி நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சமுதாயத்தில் மறுமலர்ச்சியையும், விழிப்புணர்வையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டே இந்த நிலைக்காட்சி நடத்தப்பட்டது’ என்றார் அவர்.
‘நிலைக்காட்சியில் நடிக்க கடந்த 20 நாட்களாக பயிற்சி அளிக்கப்பட்டது’ என்று மாணவி ஜெயந்தி தெரிவித்தார்.
கல்லூரி செயலாளர் அருள்சகோதரி எம். லில்லிபுஷ்பம், முதல்வர் இ.சி. புனிதா உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.