ரயில் பயணம் தொடர்பான இடர்பாடுகள் குறித்த புகார்களுக்கு 138 என்ற எண்ணை தொடர்பு கொள்ளும் வசதியை தெற்கு ரயில்வே பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தது.
ரயில் பயணம் தொடர்பான இடர்பாடுகள், மருத்துவ அவசர உதவி, உணவுப் பொருட்கள் தொடர்பான புகார்களுக்கு 138 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். பாதுகாவல் தொடர்பான அனைத்து புகார்களுக்கும் 182 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ரயில்வே பட்ஜெட்டில் நேற்று (வியாழக்கிழமை) அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ரயில்வே பட்ஜெட்டில் ரயில்வே அமைச்சர் குறிப்பிட்ட ரயில் பயணிகளின் வசதிக்காக அனைத்து இந்திய அளவிலான ஹெல்ப்லைன் எண் '138' சேவை தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட அனைத்து ரயில்வே கோட்ட வர்த்தக கட்டுப்பாட்டு அறைகளிலும் நிறுவப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ரயில்வே பட்ஜெட்டில் ரயில்வே அமைச்சர் குறிப்பிட்ட ரயில் பயணிகளின் வசதிக்காக அனைத்து இந்திய அளவிலான ஹெல்ப்லைன் எண் '138' சேவை தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட அனைத்து ரயில்வே கோட்ட வர்த்தக கட்டுப்பாட்டு அறைகளிலும் நிறுவப்பட்டுள்ளது.
சுகாதாரம், உணவு தரம், ரயில் பெட்டிகள் மேலாண்மை, மருத்துவ அவசர உதவி, ரயில்களில் வழங்கபப்டும் போர்வைகளின் தரம் தொடர்பான புகார்களை இந்த எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். பயணிகள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துரிதமாக இயங்கத் தொடங்கியது:
138 சேவை பயன்பாட்டுக்கு வந்துவிட்டதா என்பதை அறிந்து கொள்ள அந்த எண்ணை அழைத்துப் பார்த்த போது உடனடியாக அழைப்பு ஏற்கப்பட்டது. புகார் பதிவு செய்ய அழைப்பினை ஏற்றவர் தயாராக இருந்தார்.
சேவை பயன்பாட்டுக்கு உறுதி செய்வதற்கான அழைத்தோம் என்று தெரிவித்தோம். பயணிகள் அளிக்கும் புகார்கள் மீது அதிவிரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.