தமிழகம்

நில அபகரிப்பு: முறையான சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

நில அபகரிப்பு தொடர்பாக முறையான சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று வெளியிட்ட அறிக்கை:

"மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. வரதராசன், மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், உ.வாசுகி, அ.சவுந்தரராசன், பி.சம்பத், கே.பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு.

'நில அபகரிப்பு: முறையான சட்டம் இயற்றுக!'

தமிழ்நாட்டில் அரசியல் அதிகாரமிக்கவர்கள் அதிகாரிகள் மற்றும் நில வியாபாரிகள் தொடர்ந்து நில மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்கள். சாதாரண ஏழை, நடுத்தர மக்களின் நிலங்களை அபகரிப்பது மட்டுமின்றி, அரசு புறம்போக்கு நிலங்கள், கோயில் மடங்களுக்குச் சொந்தமான நிலங்கள், ஏரிகள், குளங்கள் என அனைத்து வகை நிலங்களும் அபகரிக்கப்பட்டுள்ளன.

மோசடி பத்திரப் பதிவு, நில ஆக்கிரமிப்பு, மோசடி பட்டா மாற்றம் என பல்வேறு முறைகளில் நில மோசடிகள் நடைபெற்றன. இந்த மோசடிக்கு எதிராக அச்சத்தின் காரணமாக பொதுமக்கள் புகார் செய்ய முடியாத நிலை இருந்தது.

இந்நிலையில் 2011ம் ஆண்டு அஇஅதிமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் நில அபகரிப்பு புகார்கள் பதிவு செய்ய தனிக் காவல் பிரிவு உருவாக்கியதுடன், சிறப்பு நீதிமன்றங்களை அமைத்தும் அரசாணை வெளியிட்டது.

இதன் விளைவாக நிலத்தை இழந்த மக்கள் புகார் அளித்தனர். சுமார் 18000 நில அபகரிப்பு புகார்கள் பதிவு செய்யப்பட்டன. சில இடங்களில் அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஏராளமான வழக்குகள் பல கட்ட விசாரணைகள் சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்று வருகின்றன. ஆனால் நில மோசடியில் ஈடுபட்ட அனைவர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக வந்துள்ளது.

இந்த அரசாணைகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தற்போது சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு நிலத்தை இழந்த மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அரசாணைகளை அவசர கதியில் தமிழக அரசு வெளியிட்டதே இந்த நிலைமைக்கு காரணமாகும்.

இழந்த நிலங்கள் திரும்ப கிடைக்குமா, கொடுத்த புகார்கள், தொடுத்த வழக்குகள் என்னவாகும் என்ற குழப்பத்தில் மக்கள் உள்ளனர். ஆனால் அரசு தரப்பில் இந்த தீர்ப்பு குறித்து இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் மௌனமாக இருப்பது சரியல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

நிலத்தை இழந்த மக்களுக்கு தாமதமில்லாமல் மீண்டும் நிலம் கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுப்பதுடன், நில மோசடியில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவதை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும்.

எனவே, நில அபகரிப்பு தொடர்பாக தனிச் சட்டம் இயற்ற தமிழக அரசு முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கோருகிறது.

அத்துடன் ஏற்கனவே அளிக்கப்பட்ட புகார்கள், தொடுக்கப்பட்ட வழக்குகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று மாநில அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT