தமிழகம்

பட்டா மாறுதலுக்கு வருவாய்த்துறைக்கு தனிக்கட்டணம் செலுத்த வேண்டாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

பத்திரப் பதிவின்போது நில அளவீடு மற்றும் பட்டா மாறுதலுக்கு கட்டணம் செலுத்தும் நிலையில், அந்த சேவைகளுக்காக வருவாய்த் துறையிடம் தனி கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கவுன்சில் செயலர் ஓ.பரமசிவம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

பத்திரப் பதிவு அலுவலகங் களில் பத்திரப் பதிவு நடைபெறும்போது, வாங்கும் சொத்தை அளவீடு செய்யவும், பட்டா மாறுதல் செய்யவும் பதிவுக் கட்டணத்துடன் சேர்த்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பின்னர், சொத்தை அளவீடு செய்யவும், பட்டா மாறுதல் செய்து தரும்படியும் வருவாய்த்துறையிடம் விண்ணப்பிக்கும்போது, அதற்காக தனிக்கட்டணம் செலுத்துமாறு அதிகாரிகள் கூறுகின்றனர்.

எனவே, பத்திரம் பதிவு செய்யும்போது நில அளவீடு மற்றும் பட்டா மாறுதலுக்குரிய விண்ணப்பம் மற்றும் பணத்தை உடனடியாக பத்திரப் பதிவுத்துறை வருவாய்த்துறைக்கு அனுப்பவும், அந்த விண்ணப்பம் மற்றும் கட்டணத்தை ஏற்றுக்கொண்டு, புதிதாக விண்ணப்பம், கட்டணம் வசூல் செய்யாமல் நில அளவீடு மற்றும் பட்டா மாறுதல் செய்து தர வருவாய்த்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி எஸ். தமிழ்வாணன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. பதிவுத்துறை ஐ.ஜி தாக்கல் செய்த பதில் மனுவில், அசையா சொத்துகளை பதிவு செய்யும்போது, நில அளவீடு மற்றும் பட்டா மாறுதல் தொடர்பாக படிவம் 52 பெறப்படுகிறது. இந்த படிவம் வட்டாட்சியருக்கு அனுப்பப்படும்.

இது தொடர்பாக, தமிழக அரசு 1984-ல் பிறப்பித்த அரசாணை அடிப்படையில், நில அளவீடு மற்றும் பட்டா மாறுதலுக்கு பதிவுத்துறையில் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது எனக் கூறப்பட்டிருந்தது.

விசாரணைக்குப் பின், தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவு:

பத்திரப் பதிவின்போது, நில அளவீடு மற்றும் பட்டா மாறுதல் செய்ய கட்டணம் செலுத்து வதே போதுமானது. இந்த சேவைகளுக்காக வருவாய்த் துறைக்கு தனிக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என உத்தரவிடப்பட்டது.

SCROLL FOR NEXT