திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பள்ளம் தோண்டும்போது ஐம்பொன்னாலான பழங்கால சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மணலி ஊராட்சிக்கு உட்பட்ட பரப்பாகரம் கிராமத்தில் கால்நடை மருத்துவமனை கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இதையொட்டி, 6 அடி ஆழத்துக்கு பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, ஐம்பொன்னாலான 2 அடி உயர பெருமாள் சிலை, 1 அடி உயரத்தில் 2 அம்மன் சிலைகள், உடைந்த நிலையில் நடராஜர் சிலை இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, ஊராட்சித் தலைவர் குணமணி அளித்த தகவலின்பேரில், திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் மதியழகன் சிலைகளை மீட்டு, வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு சென்றார்.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் அங்கு சிறிய பெருமாள் கோயில் இருந்ததாகவும், அந்த இடத்துக்கு ‘பெருமாள் களம்’ என்ற பெயர் தற்போதும் இருப்பதாகவும் ஊர்மக்கள் தெரிவித்தனர்.