நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு எதிராகப் போராட `நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கம்’ என்ற பெயரில் புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாக வைகோ தெரிவித்தார்.
தேனி மாவட்டம், தேவாரம் அருகே பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந் நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பொட்டிபுரத்துக்கு நேற்று வந்து ஆய்வு மையம் அமைய உள்ள இடத்தைப் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மேற்கு தொடர்ச்சி மலையில் எந்த கட்டுமானப் பணிகளும் நடைபெறக் கூடாது எனக் கஸ்தூரிரங்கன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதையும் மீறி பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பெரியாறு அணை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இடுக்கி மாவட்ட மக்களும் பாதிக்கப்படுவார்கள்.
நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு எதிராகப் போராட `நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கம்’ என்ற பெயரில் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக என்னை தேர்ந்தெடுத்துள்ளனர். செயலாளராக பேரழிவுக்கான இயக்கத்தின் தலைவர் ஸ்டாலின் செல்லப்பா, துணைச்செயலாளர்களாக மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி, சமூக ஆர்வலர்கள் முகிலன், பொன்னையன், மதிமுக மாவட்டச் செயலாளர் சந்திரன், பார்வர்டுபிளாக் கட்சியின் வல்லரசு பிரிவு இளையரசு உள்ளிட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நியூட்ரினோவுக்கு எதிராக தேவாரத்தில் மார்ச் 1-ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் சமூக ஆர்வலர் மேதா பட்கர் கலந்து கொள்ள உள்ளார் என்றார்.