பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் சேலத்தில் வரும் 15-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாமக தலைமைச் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் வரும் 15-ம் தேதி சேலத்தில் உள்ள நேரு கலையரங்கில் நடைபெறவுள்ளது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி முன்னிலையில் நடக்கும் இக்கூட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், தமிழகத்தின் தற்கால அரசியல் சூழல் குறித்தும் இந்த பொதுக்குழுவில் விவாதிக்கப்பட உள்ளது.
இந்த பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து விளக்குவதற்காக 15-ம் தேதி மாலை சேலம் புறவழிச் சாலையில் பிரமாண்ட மாநாடு நடைபெறவுள்ளது. ‘2016 ஆட்சி மாற்றத்துக்கான மாபெரும் அரசியல் மாநாடு’ என்ற தலைப்பில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் எம்பி ஆகியோர் பேசுகின்றனர்.
என் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத்தலைவர் ஜெ.குரு, பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பாமக-வினர் தங்களின் குடும்பத்துடன் கலந்து கொள்கின்றனர்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாமக மூத்த தலைவர்கள் கூறும்போது, “பாமக தலைமையில் கூட்டணி அமைத்து 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. அதனால் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசியல் மாநாட்டில் வெளியாகும்” என்றனர்.