தமிழகம்

இலங்கை கடற்படையினரால் நாகை, காரைக்கால் மீனவர்கள் 86 பேர் சிறைபிடிப்பு

கரு.முத்து

வங்கக்கடலில் மீன்பிடித்த நாகப்பட்டினம், காரைக்கால் பகுதி மீனவர்கள் 86 பேர் இலங்கை கடற்படையினரால் நேற்று வெவ்வேறு இடங்களில் சிறைபிடிக்கப்பட்டனர்.

கடந்த 24-ம் தேதி கடலில் மீன்பிடிக்க காரைக்கால் கிளிஞ்சல்மேட்டைச் சேர்ந்த செல்வமணியின் 2 படகுகளில் சென்ற செண்பகம், மதி உள்ளிட்ட 15 பேர், மதியழகனின் படகில் சென்ற சுதாகரன் உட்பட 8 பேர், காரைக்கால்மேட்டைச் சேர்ந்த விஜயேந்திரனின் படகில் சென்ற 10 பேர், காசாகுடிமேட்டைச் சேர்ந்த தங்கதுரை படகில் சென்ற 8 பேர், செல்வகுமார் படகில் சென்ற 7 பேர், கோட்டுச்சேரி மேட்டைச் சேர்ந்த சிவராமன் படகில் சென்ற 9 பேர் என மொத்தம் 7 படகுகளில் சென்ற 57 மீனவர்கள் நேற்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக மீனவர்கள் கிராம நாட்டார் வீரதாஸ் தெரிவித்தார்.

இதேபோல பிப்.24-ல் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தரங்கம் பாடி பகுதி சந்திரபாடியை சேர்ந்த செல்லக்கண்ணு என்பவரது படகில் சென்ற குமார் உட்பட 8 பேர், நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டையில் இருந்து பிப்.22-ல் சக்திவேல் என்பவரின் படகில் மீன்பிடிக்கச் சென்ற 8 பேர், செல்வம் என்ற ஏழுமலை யின் படகில் சென்ற வடிவேலு உள்ளிட்ட 8 பேர் என 24 மீனவர்களையும், 3 படகு களையும் இலங்கை கடற் படையினர் கோடியக் கரைக்கு தென்கிழக்கே பிடித்துச் சென்றுள்ளனர். மேலும் இதே நாளில் 5 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றனர்.

இவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகவும், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தியதாகவும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், காரைக்கால் மீனவர்கள் மீது, இலங்கை மீனவர்களைத் தாக்கி யதாகவும் அது தொடர்பாக அங்கு வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளதாகவும் இலங்கை தகவல்கள் கூறுகின்றன.

இலங்கை கடற்படையி னரால் பிடித்துச் செல்லப்பட்ட வர்களில் 43 பேர் ஊர்க்காவல் துறைக்கும் மீதம் உள்ளவர்கள் திரிகோணமலைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT