புதுச்சேரி: பல பிரச்சினைகளால் கடந்த 6 ஆண்டுகளில் புதுச்சேரி ஜிப்மரில் முதுநிலை மருத்துவப்படிப்புகளில் இருந்து 332 பேர் விலகியுள்ளனர். 230 பேர் மன நல ஆலோசனை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரி தேசிய அளவில் நான்காம் இடத்தில் உள்ளது. தேசிய அளவில் நடத்தப்படும் ஐஎன் ஐசிஇடி (INI CET ) தேர்வில் வென்று இங்கு முதுநிலை மருத்துவம் பயிலச் சேரும் மாணவர்கள் பல பிரச்சினைகளை சந்திக்கின்றனர். சிலர் படிப்புகளில் இருந்து விலகியும், பலர் மனநல ஆலோசனையும் பெறும் நிலைக்கு தள்ளப்படுவதாக பரபரப்பான புகார்கள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக புதுச்சேரி மேட்டுப்பாளையம் சுவாமிதாஸ் என்பவர், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு ஜிப்மர் தகவல் அதிகாரி அளித்துள்ள தகவல் விவரம்: கடந்த 2020-24 வரை பட்டமேற்படிப்பில் 276 பேர் விலகியுள்ளனர். மனநல ஆலோசனை 200 பேர் பெற்றுள்ளனர். மனநல பாதிப்புக்காக 12 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இரு பட்டமேற்படிப்பு மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். தொடர்ந்து பல நாட்களுக்கு பணி தருவதாக இரு புகார்களும், சீனியர்கள் துன்புறுத்தல் தொடர்பாக இரு புகார்களும் வந்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் கடந்த 2025-ல் விவேகானந்தன் என்பவர் அனுப்பிய கேள்விகளுக்கு ஆர்டிஐயில் ஜிப்மர் அளித்த பதிலில், கடந்த 2025-ல் 56 பேர் படிப்பிலிருந்து விலகியுள்ளனர். 30 பேர் மன நல ஆலோசனை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த 2020 முதல் 2025 வரை 332 பேர் படிப்பிலிருந்து விலகியுள்ளனர். 230 பேர் மன நல ஆலோசனை பெற்றுள்ளனர் என்பது உறுதியாகிறது.
இதுபற்றி முதுநிலைமருத்துவ மாணவர்கள் தரப்பில் விசாரித்தபோது, "மூன்று மணி நேரம் மட்டும் தூங்கியும், ஒரு வேளை உணவு மட்டுமே சாப்பிட்டும், வார விடுமுறை இல்லாமல் நாளொன்றுக்கு 21 மணி நேரம் பணி செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். பல சீனியர் மாணவர்கள் தங்கள் பணிகளை ஜூனியர் மாணவர்கள் மேல் திணிப்பதால் வேலை நேரம் நீள்கிறது. சில சீனியர் மாணவர்கள் அனைவரின் முன்னிலையில் ஜூனியர் மாணவர்களை திட்டும் சூழலும் நிகழ்கிறது" என்றனர்.
ஆர்டிஐ தகவல் பெற்றவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் விசாரித்தபோது, "ஜிப்மரில் முதுநிலைமருத்துவம் படிப்போருக்காக பெரும்பாலான துறைகள் உண்மையான பணி நேரங்கள் மற்றும் வார விடுமுறை குறித்த எந்த பதிவையும் பராமரிக்கவில்லை. மத்திய அரசின் 1992-ம் ஆண்டின் ரெசிடென்சி திட்ட விதிமுறைகள், ஒரு நாளின் பணி நேரத்தை அதிகப்பட்சமாக 12 மணி நேரமாகவும் வாராந்திர பணி நேரத்தை 48 மணி நேரமாகவும் நிர்ணயித்துள்ளது.
ஜிப்மரில் பயிற்சி மருத்துவர்கள் அதிகநேரம் பணி செய்ய வற்புறுத்தப்படுகின்றனர். இருப்பினும் மதிப்பெண் அச்சத்தால் பணி நேரம் குறித்து நிர்வாகத்திடம் புகார் தர மறுக்கின்றனர். முதுநிலை மாணவர்களுக்கு பாதிப்பு அதிகரிக்கும் சூழலில், பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தர வேண்டும். இதுதொடர்பாக ஜிப்மர் நிர்வாகம் விழித்தெழ வேண்டும்" என்றனர்.