தமிழகம்

மக்களுக்கு அனைத்து மருத்துவ சேவைகளும் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும்: உச்ச நீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

அனைத்து மருத்துவ சேவைகளும் மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்க வழிவகை செய்ய வேண் டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர் வலியுறுத்தினார்.

சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக் கழகமும், காமன்வெல்த் சட்டக் கல்வி அமைப்பும் (கிளியா) இணைந்து ‘நல்வாழ்வுக்கான உரிமைகள் - சட்டமும் நன்னெறி களும்’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கை நேற்று நடத்தின. பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ஜே.எஸ்.என்.மூர்த்தி வரவேற்றார். ‘கிளியா’ அமைப்பின் தலைவர் பேராசிரியர் டாக்டர் எஸ்.சிவக்குமார் அறிமுக உரையாற்றினார்.

கருத்தரங்கை தொடங்கி வைத்து உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.செலமேஸ்வர் பேசியதாவது:

நாட்டில் 70 முதல் 80 சதவீதம் பேர், இன்னமும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாத நிலைதான் உள்ளது. இந்நிலையில், நல்வாழ்வுக்கான உரிமை என்பது மிகவும் அவசியமாகிறது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங் கள் அதிகளவில் ஏற்படுத்தப் பட்டுள்ள போதிலும், இதுவரை அங்கு அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வசதிகள் இல்லை. எனவே, அனைத்து நோய் களுக்கும் சிகிச்சை அளிக்கும் வசதியை மாவட்ட அளவில் ஒரு மருத்துவமனையிலாவது ஏற் படுத்த வேண்டும். மருத்துவ சேவை கள் அனைத்தும் மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தலைமை உரையாற்றிய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், காவிரி நதிநீர் தீர்ப்பாயத் தலைவருமான நீதிபதி பி.எஸ்.சவுகான், ‘‘நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், மருத்துவ வசதிக்காக 1.2 சதவீதம் மட்டுமே செலவிடப்படுகிறது. ஆனால், ஐரோப்பிய நாடுகளில் 10 சதவீதம் வரை செலவிடப்படுகிறது. நாட்டில் 70 சதவீதம் பேருக்கு மருத்துவக் காப்பீடு வசதி இல்லை. 2 ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற அளவில்தான் நம் நாட்டில் மருத்துவ வசதி உள்ளது’’ என்றார்.

இக்கருத்தரங்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, ராமச்சந்திரா பல்கலைக்கழக வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT