தமிழகம்

புதுவையில் புதுமை: புகைப்பட பார்வையில் தமிழ் குடும்பங்களின் நூறாண்டு தரிசனம்

செய்திப்பிரிவு

தமிழ் பாரம்பரிய குடும்பங்களின் நூறாண்டு புகைப்பட ஆவணங்கள் புதுச்சேரி கடற்கரை சாலையில் மக்கள் பார்வைக்காக இன்று தொடங்கி ஒரு மாதத்துக்கு மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் பாரம்பரிய குடும்பங்கள்: தமிழ் புகைப்படக் கலை-நிலையங்களின் வரலாறு (1880–1980), எனும் தலைப்பில் புகைப்பட கண்காட்சியினை புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனமும் (IFP), பாண்டி ஆர்ட் (Pondy ART) அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் பின்புறம் புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள சுவர்களில் இப்புகைப்படங்கள் இக்கால சமுதாயத்தினர் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. வரும் மார்ச் 24 வரை நம்முன்னோரை புகைப்படங்களில் தரிசிக்கலாம்.

பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் சமூக அறிவியல்துறையின் ஆய்வாளருமான முனைவர் ஜோயி ஹெட்லி மற்றும் அத்துறையின் பிற இந்திய மற்றும் பிரான்ஸ் ஆய்வாளர்களால் தமிழகம் முழுக்க சேகரிக்கப்பட்ட பழைய புகைப்படங்களே பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இப்புகைப்படங்களில் நூறாண்டு காலங்களில் தந்தை, தாய், அண்ணன்-தங்கை, சகோதரர்கள், சகோதரிகள், மகளுடன் தாய் உள்ள புகைப்படங்கள், மாமாவுடன் எடுத்து கொண்ட குழந்தைகள் என அக்கால உறவுமுறைகளும் இப்புகைப்படங்களில் கவிதையாய் விரிகிறது.

இதற்கான ஏற்பாட்டை செய்துள்ள புதுச்சேரி பிரெஞ்ச் ஆய்வு நிறுவன ஆய்வாளர் ஜோயி ஹெட்லி, பாண்டி ஆர்ட் குழுவினர் காஷா வேன்டி, ஆன்டிரிஸ் டிப்பனர்,கே. முத்து குழு கூறும்போது:

"வணிக ரீதியான சிறிய புகைப்பட நிலையங்கள் அப்போதைய சென்னை மாகாணத்தின் நடுத்தர நகரங்களின் கடைவீதிகளில் அமைந்தன. அப்போதைய 1880களில் புகைப்படம் எடுத்துக்கொள்ள கணவன் - மனைவி, சகோதர - சகோதரிகள், தாத்தா - பாட்டி மற்றும் பேரக்குழந்தைகள் என அனைவரும் புகைப்பட நிலையத்திற்கு செல்வதும், பல பரிணாமங்களில் படம் எடுத்து அதை புகைப்படச்சட்டமாக (Frame) செய்து சுவற்றில் மாட்டும் வழக்கம் தமிழ் குடும்பங்களில் இருந்தன.

இப்புகைப்படங்கள் தமிழ் குடும்பங்களின் வரலாற்றை வெறும் காட்சி ரீதியாக மட்டும் வெளிபடுத்தவில்லை. மாறாக தமிழ் சமூக வரலாற்றையும், பல்வேறு குடும்ப பாரிம்பரியத்தையும், அவர்களின் உடை, பொருளாதார பின்புலம் குறித்தும் செய்திகளை வழங்குகிறது.

சேகரிக்கப்பட்ட பழங்கால புகைப்படங்கள் சிலவற்றை மக்களின் பார்வைக்காக இக்கண்காட்சியில் வைக்க உள்ளோம். பழங்கால புகைப்பட நிலையங்களில் பின்பற்றிய கலைநயத்தையும், பழமையான மரபுகளையும் காட்சி பிரதியாக மக்களின் கண்களுக்கு விருந்தாக அமையும்" என்று தெரிவித்தனர்.

புதுச்சேரிக்கு இம்மாதம் வந்தால் நம் பழங்கால சமூகத்தினரின் புகைப்பட சாட்சியையும் பார்க்க தவறாதீர்கள்.

SCROLL FOR NEXT