கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளுக்கு கொடுக்க வேண்டிய கட்டணத் தொகையை மத்திய அரசு கொடுக்காததால், வரும் கல்வியாண்டில் இலவசக் கல்வியை வழங்க மாட்டோம் என அனைத்து தனியார் பள்ளிகள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.
அனைத்து தனியார் பள்ளிகள் நலச்சங்கம் சார்பில், கோவையில் நேற்று பள்ளித் தாளாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் மாயாதேவி சங்கர் தலைமையில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட முக்கியத் தீர்மானங்கள்:
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரத்தை புதுப்பித்து, சரியான நேரத்தில் வழங்காத அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும். ஆய்வு என்ற முறையில் பள்ளிக்கு வரும் கல்வித்துறை அதிகாரிகள், அரசு அறிவிக்காத ஆணைகளைக் கூறி மிரட்டி வருகின்றனர்.
பாதிக்கப்படவுள்ள, மூடப்படவுள்ள பள்ளி நிர்வாகிகளை அழைத்து கூட்டம் நடத்தி தீர்வு காண வேண்டும். அதில் எந்த முயற்சியும் எடுக்காத பள்ளிகளை மூட வேண்டும். தவறாக செயல்படும் பள்ளிகளை பத்திரிகை செய்தி மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, கல்விக்கட்டணம் தராத மத்திய அரசைக் கண்டிக்கிறோம். மத்திய அரசு தராவிட்டால், மாநில அரசு தரும் என அறிவித்த பிறகும் தமிழக அரசு அமைதியாக இருக்கிறது. வரும் கல்வியாண்டில் இலவச கல்வி வழங்க மாட்டோம்.
பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுகைகளை தடுக்கும் வகையில், பள்ளிச் சீருடைகளை மாற்றி அமைக்க வேண்டும். 6 முதல் அனைத்து வகுப்பு மாணவிகளுக்கும் சுடிதார், 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு, கால் முட்டிக்கு கீழ் உள்ள பாவாடையை கட்டாயப்படுத்த வேண்டும். வரும் கல்வியாண்டில் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகங்களில் புத்தகங்களை வழங்க வேண்டும். தனியார் புத்தக நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது. விலைவாசி, தண்ணீர், மின்சாரம், ஆசிரியர் ஊதியம் ஆகியவற்றின் செலவு உயர்வு காரணமாக, கல்விக் கட்டணத்தை அரசு உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.