டேங்கர் லாரி உரிமையாளர்களின் தொடர் வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்தில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு உண்டாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தட்டுப்பாட்டு ஏற்படாமல் தடுக்க எண்ணெய் நிறுவனங்கள் தேவையான முயற்சிகளை எடுத்து வருவதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கான (தமிழகம் மற்றும் புதுச்சேரி) ஒருங்கிணைப்பாளர் யு.வி. மன்னூர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்:
‘தமிழகம், ஆந்திரம், கேரளம், புதுச்சேரி, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் சமையல் எரிவாயு நிரப்பும் மையங்களுக்கு தினமும் 3,200 டேங்கர் லாரிகள் மூலம் எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. இந்த டேங்கர் லாரிகள் இயக்குவதற்கான 3 ஆண்டு கால ஒப்பந்தத்துக்கு புதிதாக இ-டெண்டர் கோரப்பட்டது. இதில் டேங்கர் லாரிகளுக்கான கட்டணம் தொடர்பாக பிரச்சினை எழுந்தது. இதுதொடர்பாக டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் 3 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும், தீர்வு ஏற்படவில்லை. இதை யடுத்து, கடந்த ஜனவரி 31-ம் தேதி முதல் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட் டுள்ளனர்.
தென்மண்டலத்தில்..
இந்தத் தொடர் வேலைநிறுத்தம் காரணமாக தென்மண்டலத்தில் உள்ள 48 எரிவாயு நிரப்பும் மையங்களுக்கான விநியோகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களுக்கான சமையல் எரிவாயு விநியோகமும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எரிவாயு விநியோகத்தை சீரான நிலைக்கு கொண்டு வர தமிழக அரசுடன் சேர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் எல்லாவித முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளன என்று அந்தச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.