தி.மு.க.வில் அடுத்தடுத்து சோதனைகளை சந்திக்கும் கணவர் மு.க.அழகிரி, அரசியலில் ஏற்றம் பெறவும், எதிரிகளை சமாளித்து வாகை சூடவும் மடப்புரம் காளி கோயிலில் மனைவி காந்தி அழகிரி நீலநிறப் பட்டாடை சாத்தி, நெய் விளக்கு ஏற்றி சிறப்புப் பூஜை செய்தார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில் அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்றது. உக்கிரமான காளியை வேண்டி வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை. கூட இருந்தே பழி வாங்குவோரை பழி தீர்க்கவும், நம்பிக்கை துரோகம் செய்தவரை தண்டிக்கும் வகையிலும் பக்தர்கள் காளி அம்மனுக்கு எலுமிச்சம் பழம் மாலை, பட்டாடை சாத்துதல், காசு வெட்டிப் போடுதல், சத்தியக்கல் மீது சத்தியம் செய்வது வழக்கம்.
மு.க.அழகிரி சமீபகாலமாக பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறார். தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டது என அடுத்தடுத்து பல்வேறு பிரச்சினைகளில் அவர் சிக்கித் தவித்து வருகிறார். ஏறுமுகத்தில் இருந்த கணவர், இறங்கு முகத்தில் இருப்பதை விரும்பாத மனைவி காந்தி அழகிரி, மடப்புரம் காளி கோயிலில் திங்கள்கிழமை சிறப்புப் பூஜை செய்தார்.
உக்கிரமாக உள்ள அம்மனை சாந்தப்படுத்த, நீல நிறப் பட்டாடை சாத்தி, நெய்விளக்கு ஏற்றி, உச்சி கால பூஜையில் பங்கேற்றார். இவருடன் காந்தியின் சகோதரியும், 4 பாதுகாவலர்களும் வந்திருந்தனர்.