தமிழகம்

மாணவர்கள் மத்தியில் பிரபலமாகி வரும் இங்கிலாந்து கலைப் படிப்புகள்

செய்திப்பிரிவு

இந்திய மாணவர்கள் மத்தியில் இங்கிலாந்து பல்கலைகழக கலைப் படிப்புகள் பிரபலமாகி வருகின்றன.

இங்கிலாந்தில் படிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து சென்னை லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் நேற்று கல்வி கண்காட்சி நடைபெற்றது. பிரிட்டிஷ் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த இந்த கண்காட்சியில் 63 இங்கிலாந்து கல்வி நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கிலாந்து செல்வது தொடர்பாகவும், பல்கலைகழக நுழைவுத் தேர்வுகள் தொடர்பாகவும் தகவல்களை கேட்டறிந்தனர்.

இதுபற்றி பிரிட்டிஷ் கவுன்சிலின் உயர்கல்வி பிரிவின் தலைவர் எல்.தனசேகரன் கூறும்போது, “பொதுவாக முதுகலை படிப்புகளுக்குதான் மாணவர்கள் வெளிநாடு செல்வார்கள். ஆனால், தற்போது இளங்கலைப் படிப்புகளுக்காக இங்கிலாந்து செல்ல விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் புதிதாக லண்டன் கலைப் பல்கலைகழகம் பங்கேற்றுள்ளது” என்றார்.

பிர்மிங்காம் பல்கலைக்க ழகத்தின் அதிகாரி கார்ல் அடவே கூறும்போது, “ பிர்மிங்காம் பல்கலைகழகத்தின் எம்.பி.ஏ படிப்புதான் இது வரை இந்திய மாணவர்களிடம் பிரபலமாக இருந்தது. ஆனால், இப்போது ஆங்கிலம், நாடகம், சமூக அறிவியல், உள்ளிட்ட கலை மற்றும் மானுடவியல் படிப்புகளை மாணவர்கள் அதிகம் விரும்புகின்றனர்” என்றார்.

பிரிட்டிஷ் கவுன்சிலின் ’எஜுகேஷன் யுகே’ என்ற திட்டத்தின் மூத்த மேலாளர் சோனு ஹேமானி கூறும்போது, “இங்கிலாந்துக்கு ஒவ்வொரு ஆண்டும் 3 லட்சத்து 30 ஆயிரம் வெளிநாட்டு மாணவர்கள் புதிதாக வருகிறார்கள். இதில் 23ஆயிரம் மாணவர்கள் இந்தியர்கள். இந்த ஆண்டு இந்திய மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்காக ரூ.15 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது,” என்றார்.

கண்காட்சிக்கு வந்திருந்த ரோஷினி என்ற மாணவி கூறும்போது, “நான் லண்டன் கலை பல்கலைகழகத்தில் பேஷன் டிசைனிங் படிக்க விரும்புகிறேன். அதுகுறித்து அறிய வந்துள்ளேன்” என்றார்.

SCROLL FOR NEXT