தமிழகம்

டேங்கர் லாரி ஸ்டிரைக் 2-வது நாளாக நீடிப்பு: காஸ் நிரப்பும் பணி நிறுத்தம்

செய்திப்பிரிவு

டேங்கர் லாரி உரிமையாளர்கள் 2-வது நாளாக நேற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், நேற்று ஒரே நாளில் சுமார் 1000 டன் காஸ் நிரப்பும் பணி நிறுத்தப்பட்டது.

தமிழகம், ஆந்திரம், கேரளம் உட்பட 5 மாநிலங்களில் தினமும் 3,250-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் மூலம் காஸ் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த லாரிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய வாடகை ஒப்பந்தம் போடப்படுகிறது. அதன்படி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதியுடன் பழைய ஒப்பந்தம் முடிந்துள்ளது. ஆனால் புதிய ஒப்பந்தம் அமல்படுத்தப் படவில்லை. பல்வேறு கட்ட போராட்

டங்களுக்கு பிறகு இதுபற்றிய பேச்சுவார்த்தை தொடங்கியது.

சென்னை எழும்பூரில் எண்ணெய் நிறுவனங்களுடன் டேங்கர் லாரி உரிமையாளர்கள் 3 நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டன் ஒன்றுக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு லாரி வாடகையாக ரூ.3.06 தர வேண்டும் என்று டேங்கர் லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தினர். ஆனால், எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் டன் ஒன்றுக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.2.93 மட்டுமே லாரி வாடகையாக தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனால் அதிருப்தியடைந்த டேங்கர் லாரி உரிமையாளர்கள், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் எண்ணூர், மணலி, திருச்சி, மதுரை, சேலம், பெங்களூர் உட்பட 40 இடங்களில் லாரிகளில் காஸ் நிரப்பும் பணிகள் நிறுத்தப்பட்டன.

இது தொடர்பாக தென்மண்டல எல்பிஜி லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கார்த்திக், முன்னாள் தலைவர் எம்.பொன்னம்பலம் ஆகியோர் கூறும்போது, “எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளோம். இதன் காரணமாக தென் இந்தியாவில் நேற்று ஒரே நாளில் சுமார் 1000 டன் காஸ் நிரப்பும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரையில் எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. எனவே, எங்களின் போராட்டம் தொடரும்’’ என்றனர்.

SCROLL FOR NEXT