தமிழகம்

ஐ.டி. துறையில் ஆட்குறைப்பை தடுக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் மாநில மாநாட்டில் தீர்மானம்

செய்திப்பிரிவு

தகவல் தொழில்நுட்ப (ஐ.டி) துறையில் நடைபெற்று வரும் ஆட்குறைப்பு நடவடிக்கையை தடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21-வது மாநில மாநாடு சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டின் மூன்றாவது நாளான நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு 923 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட் டுள்ளனர். மாநிலத்தில் பெண் குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது.

பெண்கள் மீது அமில வீச்சு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந் நிலையில் குழந்தைகள் மீதான வன்முறைகளை விசாரிக்க குழந்தைகள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். மகளிர் சிறப்பு நீதிமன்றங்களை அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்த வேண்டும்.

தகவல் தொழில்நுட்பத் துறை யில் நடைபெற்று வரும் ஆட் குறைப்பை தடுக்க வேண்டும். நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் துறைகளில் சுமார் 30 லட்சம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள்.

தமிழகத்தில் 4.5 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந் நிலையில் டிசிஎஸ் நிறுவனம் சமீபத்தில் 25 ஆயிரம் தொழிலாளர் களை வெளியேற்றி உள்ளது. அதேபோல் விப்ரோ மற்றும் ஐபிஎம் ஆகிய நிறுவனங்களும் ஆட்குறைப்புக்கான அறிவிப்பு களை வெளியிட்டுள்ளன.

நாட்டில் ஆண்டுக்கு 2 லட்சம் மாணவர்கள் தகவல் தொழில் நுட்பத்தில் பட்டம் பெறுகின்றனர்.

இந்நிலையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் தற்போது நடைபெற்று வரும் ஆட்குறைப்பு நடவடிக்கையை தடுக்க வேண்டும். தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஊழலை ஒழிக்க தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும். ஊழல் தடுப்பு சட்டத்தில் உரிய திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். தமிழகத்தின் ரயில் வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்ய வேண்டும்.

மத்திய அரசு சமீபத்தில் திருத்தி அமைத்த தொழிலாளர் நலசட்டத்தில் தொழிலாளர்களை கடுமையாக பாதிக்கும் அம்சங்கள் உள்ளன. இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நேற்று நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT