தமிழகம்

சுதந்திரப் போராட்ட தியாகி மாயாண்டி பாரதி மறைவு

செய்திப்பிரிவு

மதுரையில் சுதந்திரப் போராட்ட தியாகி மாயாண்டி பாரதி உடல்நலக் குறைவால் காலாமானார். அவருக்கு வயது 98.

1917-ம் ஆண்டு மதுரையில் பிறந்தவர் மாயாண்டி பாரதி. மூன்றாம் வகுப்பு படிக்கும்வரை மாயாண்டி பாரதியால் கேட்கவோ பேசவோ இயலவில்லை. பத்து வயதுக்குப் பிறகே அவரால் பேசவும், கேட்கவும் முடிந்தது. பத்தாவது வரை மட்டுமே படித்தார். அதற்குப் பிறகு சுதந்திரப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட பல போராட்டங்களில் பங்கேற்றுப் போராடினார்.

சுதந்திரத்துக்குப் பிறகும் உண்மையான சுதந்திரம் இது வல்ல என்று சொல்லி பல்வேறு போராட்டங்களை நடத்தியதால் சுமார் 13 ஆண்டுகளை சிறையில் கழித்தார்.

எழுத்தாளர்,இலக்கியவாதி, தியாகிகள் சங்கத் தலைவர். முதுபெரும் கம்யூனிஸ்ட், ஊழல் எதிர்ப்புப் போராளி என்று பன்முகங்கள் கொண்ட மாயாண்டி பாரதி சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற கிரானைட் ஊழலை வெளிக்கொண்டுவருவதற்காகப் போராடினார்.

'போருக்குத் தயார் ' என்ற நூலை மறுபதிப்பு செய்ய வேண்டும். எழுதி வைத்திருக்கும் 3 புத்தகங்களை பதிப்பிக்க வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது. ஆனால், அது நிறைவேறாத கனவாக இருந்துவிடும் என்று மாயாண்டி பாரதி கொஞ்சம் கூட நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்.

மத்திய அரசின் தியாகிகள் பென்ஷனும் மாநில அரசின் முதியோர் உதவித் தொகையும் பத்திரிகையாளர் ஓய்வூதியமும் இவரை தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தன. அதிலும் பெரும் பகுதியை புத்தகங்கள் எழுதுவதற்கே ஒதுக்கி விடுவதால் மருத்துவச் செலவுக்கு தட்டுப்பாடான நிலை. அதனால்தான் வெட்கத்தைவிட்டு நட்புகளிடம் நிதி கேட்டிருந்தார் மாயாண்டி பாரதி.

அக்காள் பேத்தியின் நிழலில் அண்டி நின்றார்.மருத்துவம் உள்ளிட்ட மாதாந்திர செலவுகளுக்காக அவதிப்பட்டு வந்த மாயாண்டி பாரதி உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

SCROLL FOR NEXT