தமிழகம்

“நீக்கப்பட்ட 328 உதவி பேராசிரியர்களை பணி நிரந்தரம் செய்க” - அண்ணாமலை

மோகன் கணபதி

சென்னை: பணி நீக்கம் செய்யப்பட்ட அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் 328 பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசை, அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், ‘‘தமிழகம் முழுவதுமுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் 16 உறுப்புக் கல்லூரிகளில், சுமார் 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்த 328 உதவிப் பேராசிரியர்களை, நிதி நிலைமை காரணம் கூறி, கடந்த ஜனவரி 31 அன்று பணிநீக்கம் செய்தது திமுக அரசு.

இந்த நிலையில், ஆசிரியர்கள் இல்லாததால், தமிழ் உட்பட பல்வேறு பாடங்களுக்கு, கடந்த இரண்டு மாதங்களாக வகுப்புகளே நடைபெறவில்லை. ஆனால், இன்று முதல் உள் தேர்வுகள் தொடங்கவிருக்கின்றன. இதனால், அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள், குழப்பத்தில் இருக்கிறார்கள். வகுப்பே நடத்தப்படாமல், மாணவர்களை உள் தேர்வு எழுதச் சொல்லுவது, கல்வி முறைக்கே அவமானம். தமிழ் பாடத்துக்கே ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்பதுதான், திமுக அரசு தமிழை வளர்க்கும் லட்சணம்.

          

அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டுமே, சுமார் 45.44% ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருபவர்களைப் பணி நிரந்தரம் செய்யாமல், காலிப் பணியிடங்களையும் நிரப்பாமல், மாணவர்களின் கல்வியை கேள்விக்குறியாக்கியிருக்கிறது திமுக அரசு.

பத்து ஆண்டுகளுக்கும் மேல் தற்காலிகப் பணியாற்றுபவர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதி எண் 153 ல், கூறியிருந்த திமுக, அவர்களைப் பணி நீக்கம் செய்ததோடு மட்டுமல்லாமல், புதிய நியமனங்களையும் மேற்கொள்ளவில்லை.

அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு, ஊதியம் வழங்க நிதி இல்லை என்று கூறி, மாணவர்களின் கல்வியை பாழாக்கிவிட்டு, இந்த ஆண்டு திமுக அரசு அறிவித்த பட்ஜெட்டில், அண்ணா பல்கலைக்கழகத்தை தரம் உயர்த்த ரூ.1,380 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது தான், இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை. பொய்யான விளம்பரங்களை வைத்தே மக்களை ஏமாற்றி விடலாம் என்று கனவு காண்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

உடனடியாக 328 பகுதி நேர ஆசிரியர்களையும் பணி நிரந்தரம் செய்து, மீண்டும் வகுப்புகளை தொடங்கி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று, திமுக அரசை வலியுறுத்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT