தமிழகம்

கவர்ச்சிகரமான வார்த்தைகளை உள்ளடக்கிய ரயில்வே பட்ஜெட்: குருதாஸ் தாஸ்குப்தா கருத்து

செய்திப்பிரிவு

மத்திய ரயில்வே பட்ஜெட், மக் களுக்கான எந்த திட்டங்களையும் அறிவிக்காத, வெறும் கவர்ச்சிகரமான வார்த்தைகளை மட்டும் உள்ளடக்கிய பட்ஜெட் என ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் குருதாஸ் தாஸ்குப்தா தெரிவித்துள்ளார்.

கோவையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. இதில், கலந்து கொள்வதற்காக வந்த குருதாஸ்தாஸ் குப்தா, செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: டீசல் விலை குறைந்துள்ளபோதும் ரயில் கட்டணத்தை குறைக்கவில்லை. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் செல்லும் ரயில், சரியான நேரத்துக்கு வருவதற்கான உத்தரவாதமோ, திட்டமோ இந்த பட்ஜெட்டில் இல்லை. ரயில்வே பாதுகாப்பு குறித்தும் முக்கியத்துவம் இல்லை. ரயில்வே துறையில், தனியார் ஊக்குவிப்புக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. பொதுத்துறையான ரயில்வே துறையை தனியார் மயப்படுத்தும் முயற்சிகள் தடுக்கப்பட வேண்டும்.

பட்ஜெட் ஆவணங்கள் திருடப்பட்டது தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆவணங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நாடாளுமன்றத்தில் உள்ள ஊழியர்களே வழங்கியுள்ளனர். இதன் மூலம் அரசுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் உள்ள இணைப்பு அம்பலமாகியுள்ளது.

பாஜக ஆட்சிக்கு வந்தால் நூறு நாட்களில் கருப்புப் பணத்தை மீட்டு மக்களுக்கு தருவோம் என்றார்கள். இப்போதுவரை அந்த பட்டியலைக்கூட அவர்கள் வெளியிடவில்லை. அந்த பட்டியலில் உள்ளவர்களை காப்பாற்றுகிற வேலையைத்தான் பாஜக செய்யும். தேர்தல் சமயத்தில் பாஜக ஏகப்பட்ட வாக்குறுதிகளை அளித்தது. அதில் ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை என்றார்.

பேட்டியின்போது, கட்சியின் தேசியச் செயலாளர் து.ராஜா, மாநிலச் செயலாளர் தா.பாண்டி யன் ஆகியோர் இருந்தனர்.

SCROLL FOR NEXT