தமிழகம்

சென்னையில் மாற்று இதயம் பொருத்தப்பட்ட ரஷ்ய குழந்தை குணமடைந்தது: தாய் கண்ணீர் மல்க நன்றி

செய்திப்பிரிவு

மாற்று இதயம் பொருத்தப்பட்ட ரஷ்ய குழந்தையின் உடல்நிலை குணமானது. இதற்காக டாக்டர் களுக்கும், குழந்தையின் இதயத்தை தானம் கொடுத்த பெற்றோருக்கும் குழந்தையின் தாய் நன்றி கூறியுள்ளார்.

ரஷ்யாவின் மாஸ்கோ நகரை சேர்ந்தவர் நெல்லி. இவரது ஆண் குழந்தை கிளெப் (2 வயது, 9 மாதம்) இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தது. குழந்தையின் உயிரைக் காப்பற்ற வேண்டுமானால், மாற்று இதயம் பொருத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

ரஷ்யா மற்றும் ஜெர்மனியில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க முடியாமல் கைவிடப்பட்ட அந்தக் குழந்தை, கடந்த அக்டோபர் மாதம் சென்னை அடையாறில் உள்ள ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 18-ம் தேதி பெங்களூருவில் மூளைச்சாவு அடைந்த 2 வயது ஆண் குழந்தையின் உடல் உறுப்புகளை அக்குழந்தையின் பெற்றோர்கள் தானம் செய்ய இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனை அறிந்த டாக்டர்கள் பெங்களூரு விரைந்து சென்றனர். அந்த குழந்தையிடம் இருந்து தானமாக கிடைத்த இதயத்துடன் சிறப்பு விமானம் மூலம் 19-ம் தேதி சென்னை திரும்பினர்.

விமான நிலையத்தில் தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலமாக இதயத்தை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனைக்கு மின்னல் வேகத்தில் கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் தயார் நிலையில் இருந்த இதய சிகிச்சை துறை தலைவர் டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், அவசர சிகிச்சை மற்றும் இதய மயக்கவியல் துறை தலைவர் டாக்டர் சுரேஷ் ராவ் தலைமையிலான குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் ரஷ்ய குழந்தைக்கு மாற்று இதயத்தை வெற்றிகரமாக பொருத்தினர்.

இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு, குழந்தையின் உடல்நிலை குணமாகியுள்ளது.

இது தொடர்பாக டாக்டர்கள் கே.ஆர்.பாலகிருஷ்ணன், சுரேஷ் ராவ் ஆகியோர் கூறியதாவது:

சுமார் 8 மணி நேரம் நடந்த சிக்கலான அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தைக்கு மாற்று இதயத்தை பொருத்தியுள்ளோம். சிகிச்சை முடிந்து 10 நாட்களுக்கு பிறகு, குழந்தையின் உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக குணமடையத் தொடங்கியது.

தற்போது குழந்தையின் உடல் எடையும் அதிகரித்துள்ளது. குழந்தையும் நன்றாக இருக்கிறான்.

இந்தியாவிலேயே முதல் முறையாக மிகக்குறைந்த வயதுள்ள குழந்தைக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

குழந்தையின் தாய் நெல்லி கண்ணீருடன் கூறியதாவது:

டாக்டர்கள் நல்ல முறையில் சிகிச்சை அளித்து குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளனர். எனது குழந்தைக்கு புதிய வாழ்க்கையை கொடுத்துள்ளனர்.

இதயத்தை தானமாக கொடுத்த குழந்தையின் பெற்றோரையும், சிகிச்சை அளித்த டாக்டர்களையும் எனது வாழ்நாளில் மறக்க மாட்டேன். அவர்களை கடவுளாக நினைத்து வழிபடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT