நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ள நிலையில் பேருந்து கட்டணத்தை தமிழக அரசு குறைக்காதது ஏன் என ஸ்ரீரங்கம் தொகுதியில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பினார்.
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் என்.ஆனந்தை ஆதரித்து, ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட மணிகண்டத்தில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது. அதிமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டி பேருந்து கட்டணத்தை உயர்த்தினர். இதனால் ஏழை எளிய, நடுத்தர மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். ஆனால், தற்போது நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுவிட்டது. ஆனால், உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணம் குறைக்கப்படவில்லை. வாகன எரிபொருள் விலை குறைந்த போதிலும், பேருந்து கட்டணத்தை தமிழக அரசு குறைக்காதது ஏன்?
போக்குவரத்துத் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக வீதியில் இறங்கி போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதேபோன்று மாணவர்களும் வீதியில் இறங்கி போராடும் நிலை உள்ளது. மக்கள் நலப் பணிகள் முற்றிலும் முடங்கிப் போயுள்ளன. தமிழகத்தில் அரசு என்று ஒன்று செயல்படுகிறதா என்ற சந்தேகம் தமிழக மக்களிடம் எழுந்துள்ளது.
திருநங்கைகளின் நிலையை மேம்படுத்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, அவர்களுக்கென நலவாரியம் ஏற்படுத்தி, பல்வேறு சலுகைகளை வழங்கி, சமுதாயத்தில் மதிக்கப்படுகின்ற நிலையை உருவாக்கினார். ஆனால், இன்றைக்கு சென்னை மாநகராட்சி, தங்கள் தேவைக்காக திருநங்கைகளை மீண்டும் வீதியில் இறக்கி நடனமாட வைத்துள்ளது. எந்த நோக்கத்துக்காக அவர்களுக்கு நலவாரியம் தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கம் சென்னை மாநகராட்சியின் செயலால் பாழடைகிறது.
அதிமுக அரசுக்கு தமிழ் உணர்வு இல்லை என்பதையும் வாக்காளர்கள் புரிந்துகொள்ளவேண்டும். ஸ்ரீரங்கத்தில் கட்டப்பட்டுள்ள சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதி யாத்ரிகர் நிவாஸ் என அழைக்கப்படுகிறது. அழகிய தமிழில் அழைக்க அரசுக்கு மனம் இல்லையா? மக்கள் நலன் பற்றி கவலை இல்லாத, தமிழ் உணர்வு இல்லாத அரசு தேவையா என்பதை வாக்காளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றார்.
பிரச்சாரத்தின்போது, திமுக வேட்பாளர் என்.ஆனந்த் உடனிருந்தார்.