மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கக்கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இந்து தேசிய காங்கிரஸ் நிறுவனத் தலைவர் மதுசூதனபெருமாள் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:
ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் 2013-ம் ஆண்டில் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், குறிப்பிட்ட மதக் கடவுள்களை பற்றி விமர்சித்திருந்தார். பேரழிவிலிருந்து தப்பிக்க அனைவரும் இயேசுவிடம் சரணடைய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதற்காக உமாசங்கர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராஜாக்கமங்கலம் போலீஸில் புகார் அளித்தேன். போலீஸார் நடவடிக்கை எடுக்காததால், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் என் புகார் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பிறகும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.
உமாசங்கர் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து வருகிறார். மேலும், மத பிரசார கூட்டங்களில் குறிப்பிட்ட மதக் கடவுள்களை இழிவாக பேசி அமைதியாக வாழும் மக்களிடம் மோதலை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பாக ஜோதி என்பவர் உமாசங்கர் மீது இரணியல் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
கடந்த 15.1.2014-ல் தமிழ்நாடு கிறிஸ்தவ முன்னேற்ற ஐக்கியம் அமைப்பினர் நாகர்கோவிலுள்ள ஆட்சியர் அலுவலகம் முன் ஓரினச்சேர்க்கையை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உமாசங்கர் பங்கேற்று பேசினார். இதனால் உமாசங்கர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி சி.டி.செல்வம் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதையடுத்து, விசாரணையை பிப். 13-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.