தமிழகம் முழுவதும் இம்மாத இறுதிக்குள் 236 பொது சேவை மையங்கள் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண்மை இயக்குநர் குமரகுருபரன் கூறினார்.
பொதுமக்களுக்கு அரசு சான்றிதழ்கள் விரைவில் கிடைக்கும் விதமாக சில மாவட்டங்களில் உள்ள தாலுகா அலுவலகங்களில் தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் ‘பொது சேவை மையங்கள்’ அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களுக்கான பயிற்சி முகாம் சென்னையில் நேற்று நடந்தது. முகாமைத் தொடங்கி வைத்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண்மை இயக்குநர் குமரகுருபரன் பேசிய தாவது:
பொதுமக்களுக்கு அரசு சான்றிதழ்கள் எளிதில் கிடைக் கும் வகையில் தாலுகா அலு வலகங்களில் தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் பொது சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம் மாவட்டங்களில் மட்டும் இந்த பொது சேவை மையங்கள் செயல்படுகின்றன.
தமிழகம் முழுவதும் இந்த சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது. இம்மாத இறுதிக்குள் மொத்தம் 236 பொது சேவை மையங்கள் திறக்கப்படும். இந்த சேவை மையத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள ஊழியர்கள், பொதுமக்களின் தேவைகளை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும்.
அரசின் உதவிகள் மக்களுக்கு உடனுக்குடன் கிடைக்கும் வகையில் செயல்பட வேண்டும். இந்த பொது சேவை மையத்தில் வருமானச் சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரிச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உள்ளிட்டவை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.