தமிழகம்

ரூ.6 கோடி மதிப்புள்ள 310 டன் குட்கா, பான் மசாலா பறிமுதல்: தமிழகத்தில் தடையை மீறி விற்பனை

சி.கண்ணன்

தமிழகத்தில் 10 மாதங்களில் தடையை மீறி விற்பனை செய்யப்பட்ட ரூ.6 கோடி மதிப்புள்ள 310 டன் குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

புகையிலை பொருட்களால் ஏற்படும் புற்றுநோய்களை தடுப்பதற்காக, தமிழகத்தில் குட்கா, பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலை பொருட்களை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விநியோகம் செய்யவும், விற்பனை செய்யவும் 2013-ம் ஆண்டு மே மாதம் தடைவிதித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து கடைகளில் சேமித்து வைத்துள்ள குட்கா, பான் மசாலா ஆகிய புகையிலை பொருட்களை விரைவாக அப்புறப்படுத்த தமிழக உணவு பாதுகாப்புத் துறை ஒரு மாதம் கால அவகாசம் கொடுத்தது.

பின்னர் கடைகளில் பதுக்கி வைத்து மறைமுகமாக விற்பனை செய்யப்படும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்வதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் தலைமையில் போலீஸார், வருவாய்த் துறையினர், சுங்கத் துறையினர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டது. இந்த பறக்கும் படையினர் தமிழகம் முழுவதும் அதிரடியாக சோதனை நடத்தி கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த குட்கா, பான் மசாலா போன்ற புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் குடோன்களில் பதுக்கி வைத்துள்ள குட்கா, பான் மசாலாக்களையும் பறிமுதல் செய்கின்றனர்.

இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பறக்கும் படையினர் சோதனை செய்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

310 டன் பறிமுதல்

நாடாளுமன்ற தேர்தலுக்காக சோதனையை தற்போது கொஞ்சம் நிறுத்தி வைத்துள்ளோம். தேர்தல் முடிந்த பிறகு, முழு வீச்சில் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளோம். ஏற்கெனவே சோதனை நடத்தி பறிமுதல் செய்த கடைகளில், யாராவது குட்கா, பான் மசாலா விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளோம். தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் மார்ச் மாதம் வரை 10 மாதத்தில் சுமார் 310 டன் குட்கா, பான் மசாலா போன்ற புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளோம். இவற்றின் சந்தை மதிப்பு ரூ.6 கோடி இருக்கும்.

புகார் தெரிவிக்கலாம்

தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட் களை கடைகளில் விற்பனை செய்வதை பொதுமக்கள் பார்த்தால் உணவுப் பாதுகாப்புத் துறைக்கு 9444042322 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். அந்த இடத்துக்கு உடனடியாக பறக்கும் படையினர் வந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்வார்கள்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT