சென்னை மெரினா கடற்கரையில் சவாரியில் ஈடுபடுத்தப்பட்ட 2 குதிரைகளை காவல் துறையினர் மீட்டு புளூகிராஸ் அமைப்பினரிடம் ஒப்படைத்தனர்.
மெரினா கடற்கரையில் குதிரைகளை சவாரியில் ஈடுபடுத்துவதற்கு தடை உள்ளது. ஆனால் இதனை மீறி கடற்கரை பகுதிகளில் குதிரைகள் சவாரிக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பெசன்ட்நகர் கடற்கரை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குதிரை ஒன்று உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து கடற்கரை பகுதிகளில் குதிரைகளை சவாரியில் ஈடுபடுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பாக மெரினா கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் நேற்று காவல் துறையினர் மெரினாவில் சவாரியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 2 குதிரைகளை மீட்டனர். பின்னர் அவற்றை புளூகிராஸ் அமைப்பினரிடம் காவல் துறை யினர் ஒப்படைத்தனர்.