சமீபத்தில் உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வினால் ஏழை, நடுத்தர மக்களுக்கு பாதிப்பு இல்லை என மின்சாரத் துறை அமைச்சர் விஸ்வநாதன் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்து பேசினார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்தது. அப்போது தேமுதிக எம்எல்ஏ பார்த்திபன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ டில்லிபாபு ஆகியோர் விலைவாசி உயர்வினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மின்கட்டண உயர்வை குறைக்க வேண்டுமென வலியுறுத்தி பேசினர்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விளக்கம் அளித்து பேசியதாவது:
"தமிழகத்தில் சமீபத்தில் உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வினால் 94 சதவீத வீட்டு உபயோகிப்பாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அதாவது, மாதந்தோறும் 1 யூனிட் முதல் 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோர் 63 லட்சத்து 38 ஆயிரம் பேர், 101 யூனிட் முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துவோர் 48 லட்சத்து 18 ஆயிரம் பேர், 201 யூனிட் முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துவோர் 44 லட்சத்து 64 ஆயிரம் பேருக்கும் மின்கட்டண உயர்வு இல்லை.
உயர்த்தப்பட்ட கணிசமான கட்டண உயர்வுக்கு தமிழக அரசே மானியமாக செலுத்துகிறது. 500 யூனிட்க்கு மேல் பயன்படுத்தும் மின்நுகர்வோருக்கு மட்டுமே 15 சதவீதம் மின்கட்டணம் உயர்வு வசூலிக்கப்படுகிறது.
அதேபோல், வணிக மற்றும் தொழில் நிறுவனங்கள் தான் மின்கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, 6 சதவீத மின்நுகர்வோருக்கு மட்டுமே மின்கட்டண உயர்வு இருக்கிறது. கணிசமான கட்டண உயர்வு செய்துள்ள போதிலும், மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் மின்கட்டணம் குறைவாக தான் இருக்கிறது.
மேலும், தமிழகத்தில் ஆண்டுக்கு தனிமனித மின்நுகர்வு 1198 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், மின்திட்டங்கள் மூலம் உற்பத்தியை அதிகரித்துக் கொண்டு வருகிறது" என்றார் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்.