நான் தாமரையைப் பிரிந்தது உண்மைதான். இதுதான் சரியான ஜனநாயகத் தீர்வு என்கிறார் தோழர் தியாகு.
தன்னுடைய கணவர் தியாகுவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக, கவிஞர் தாமரை தெரிவித்துள்ளார். | விரிவான செய்தி ->நியாயம் கிடைக்கும் வரை ஓயமாட்டேன்: கணவர் தியாகுவுக்கு எதிராக கவிஞர் தாமரை போராட்டம் |
மனித உரிமைப் போராளியாகவும், தமிழ்த் தேசியவாதியாகவும் தன்னை அடையாளப்படுத்திப்படுத்திக் கொள்கிற என் கணவர் தியாகு என்கிற தியாகராஜன் கடந்த 23.11.2014-ல் வீட்டை விட்டு வெளியேறித் தலைமறைவாகி விட்டார் என்ற குற்றச்சாட்டை தாமரை முன் வைக்கிறார்.
இதுகுறித்து தியாகுவிடம் கேட்டபோது அவர் கூறியது:
''நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. சென்னை - வேளச்சேரியில் மகள் வீட்டில்தான் இருக்கிறேன். தாமரையோடு என்னால் இருக்க முடியவில்லை. கடந்த ஐந்து வருடங்களாக எங்களுக்குள் பிரச்சினை இருந்தது உண்மைதான். அதற்கு ஒரு முடிவு வேண்டும் அல்லவா?
இல்லறத்தில் இருந்து பொது வாழ்க்கையில் ஈடுபடலாம். இல்லாது போன அறத்தில் இருந்து எப்படி பொதுவாழ்க்கையில் ஈடுபடுவது?
ஒவ்வாமை அளவுக்கு மீறிப் போய்விட்டது. சேர்ந்து வாழ முடியாமல் இருக்கும் போது பிரிவதுதான் ஜனநாயகத் தீர்வு. அடித்தோம், உதைத்தோம் என்பதுதான் தவறு. பிரிந்து போவது தவறு இல்லை.
எந்தத் தப்பும் செய்யாமல் என் மகன் வருத்தப்படுவதுதான் கஷ்டமாக இருக்கிறது. என் மகனிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
எத்தனையோ முறை மகனை பகடைக் காயாக பயன்படுத்த வேண்டாம் என்று தாமரையிடம் சொல்லியிருக்கிறேன். ஆனால், அவரை பகடைக் காயாக பயன்படுத்திக் கொண்டே இருக்கிறார்.
ஏழாவது படிக்கும் என் மகனை நான் வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவன் வளர்ந்த பிறகு யாருடன் இருக்க வேண்டும் என்பதை அவரே தீர்மானிக்கட்டும்.
என் மகன் அம்மா மாதிரி கெட்டிக்காரன். நிறைய புத்தகங்கள் படிப்பார். நன்றாக எழுதுவார். கணினியைக் கையாளும் திறன் இருக்கிறது. என் மகன் வளர்ந்து பெரியவன் ஆனதும், நான் பிரிந்தது நன்மைக்குதான் என உணர்ந்து கொள்வார் '' என்று முடித்துக் கொண்டார் தியாகு.
</p>