தமிழகம்

ஸ்ரீரங்கத்தில் பிரச்சாரம் இல்லை: விஜயகாந்த் முடிவால் பாஜக அதிருப்தி

எம்.மணிகண்டன்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக விஜயகாந்த் பிரச்சாரம் செய்யாததால் தமிழக பாஜகவினர் அதிருப்தியில் உள்ளனர்.

தமிழகத்தில் காலியாகவுள்ள ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகு திக்கு 13-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் அதிமுக, திமுக, பாஜக, மார்க்சிஸ்ட் கட்சிகளிடையே 4 முனைப் போட்டி நிலவுகிறது. அதிமுக, திமுக, மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சிகளின் தலைவர்களும், கூட்டணிக் கட்சி யினரும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

பாஜக வேட்பாளரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுபற்றி விஜயகாந்த் எதுவும் கூறாததால் பாஜகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக பாஜக மூத்த நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ‘‘ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக முடிவு செய்தபோதே பிரச்சாரத்துக்கு வரவேண்டும் என விஜயகாந்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அவர் இதுவரை எந்த பதிலையும் கூறவில்லை. இது கூட்டணி தர்மத்தை மீறும் செயலாகும்’’ என்றனர்.

“ஸ்ரீரங்கத்தில் பாஜக வேட் பாளருக்காக பணியாற்ற வேண்டும் என்று திருச்சி மாவட்டச் செயலாளருக்கு விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார். இப்போது நடப்பது ஒரு தொகுதிக்கான இடைத்தேர்தல். கூட்டணி தர்மத்தை மதித்துதான் கடைசி நேரத்தில் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்தோம்’’ என்று தேமுதிக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கேட்டபோது, ‘‘தேமுதிக தலைவர் விஜயகாந்த், எங்கள் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மிகவும் குறுகிய காலம் என்பதால் அவரது பிரச்சார தேதியை திட்டமிட முடியவில்லை. ஆனால், திருச்சி மாவட்ட தேமுதிக சார்பில் 10-ம் தேதி (இன்று) மிகப்பெரிய பிரச்சார பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் உள்ளூர் தேமுதிக நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்’’ என்றார்.

SCROLL FOR NEXT