தமிழகம்

ஸ்ரீரங்கத்தில் மார்க்சிஸ்ட் போட்டியிட்டது ஏன்? - மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விளக்கம்

செய்திப்பிரிவு

ஸ்ரீரங்கம் சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிட்டது ஏன்? என்று கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21-வது மாநில மாநாடு சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. மாநாட்டின் இரண்டாவது நாளான நேற்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர், ஜி.ராமகிருஷ்ணன் அளித்த பேட்டியில் கூறியதாவது:

கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் உள்ள குறைபாடுகள் முழுமையாக களையப்பட வேண்டும். சிறுபான்மையின மக்கள் தங்களுக்கு சொந்தமான இடத்தில் மசூதி மற்றும் தேவாலயம் கட்ட அனுமதி தர வேண்டும்.

ஆங்கிலேயர் அரசால் சுதந்திரப் போராட்ட வீரர் சிங்காரவேலரின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சொத்துகளை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை கடற்கரை சாலையில் சிங்காரவேலருக்கு சொந்தமான இடம் தற்போது லேடி வெலிங்டன் வளாகம் என அழைக்கப்படுகிறது. அந்த இடத்தில் அவரின் பெயரில் வளாகம் அமைத்து, அங்கு சிங்காரவேலரின் உருவச்சிலை வைக்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக மதவாத கட்சியான பாஜக போட்டியிட்டது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பார்வையாளர் போல் பார்த்து கொண்டு இருக்க முடியாது. இந்த காரணத்தால்தான் ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டோம். அங்கு நடைபெற்ற பணம் மற்றும் அதிகார பலத்தை தடுக்க மாநில தேர்தல் ஆணையம் தவறிவிட்டது.

இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

SCROLL FOR NEXT